ருத்ராட்சம் மகிமை.. அரிய தகவல்கள் - 27

By 
rudra1

ருத்ராட்சம் அணிந்தவர்கள் கட்டாயம் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். ருத்ராட்சத்தில் பல முகங்கள் உள்ளன. அதில் நமக்கு ஏற்றது எது என்பதை பார்த்து வாங்க வேண்டும். மேலும் ருத்ராட்சையில் போலி கலந்து விடுவார்கள் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும்.

ருத்ராட்சம் அணிவது பற்றி ஸ்ரீ மத் தேவி பாகவதம், சிவ மஹா புராணம், மிகப் பழமையான சிவ ஆகமங்களில் சொல்லப் பட்ட தெய்வ ரகசியம்.

01. எவ்வித மந்திரங்களை உச்சரிக்காதவனும், எவ்வித யாகங்களைச் செய்யாதவனும் கூட ருத்ராட்ச மணிகளை வெறுமனே தொடுவதன் மூலம் தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, மறு பிறவியில் ருத்ரனாகவே அவதரிக்கிறான். 

02. ருத்ராட்சத்தை அணிபவனும், வழிபடுபவனும் சம்சார பந்தங்களில் இருந்து விடுபட்டு, தொடர இருக்கும் அனேக கோடி பிறப்புகளில் இருந்தும் விடுபடுகிறான். 

03. ருத்ராட்சம் அணிந்த ஒருவனுக்கு உணவும், உடையும் தருபவனும், ருத்ராட்சம் அணிந்த சிவனடியார்களின் பாதங்களைக் கழுவிய நீரை தீர்த்தமாக ஏற்றுக் கொள்பவனும் அனைத்துப் பாவங்களில் இருந்தும் விடுபட்டு, சிவ லோகத்தை அடைகிறான். 

04. நம்பிக்கையோடும், நம்பிக்கை இல்லாமலும் ருத்ராட்சத்தை அணிந்து கொள்பவன் ருத்ர அம்சத்தைப் பெறுகிறான். 

05. ருத்ராட்சத்தின் மகிமையை என்னாலும் விளக்கிக் கூற முடியாது என்று சிவபெருமான் தேவிக்கு உரைத்ததாக ஸ்ரீ'மத் தேவி பாகவதம் கூறுகிறது. 

06. அனைத்து வித ஸ்தோத்திரங்களை உச்சரிப்பதன் மூலமும், விரதங்களை அனுசரிப்பதன் மூலமும் அடைகின்ற பலனை, ஒருவன் ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதன் மூலம் பெறுவான். 

07. ருத்ராட்ச மாலையை அணிந்தவருக்கு ஒருவன் உணவு அளிப்பானாகில், அவனது 21 தலைமுறை மக்களும் பாவங்களில் இருந்து விடுபட்டு, ருத்ர லோகத்தை அடைவார்கள். 

08. சண்டாளனாகப் பிறந்தவனும், ருத்ராட்சத்தோடு தொடர்பு கொள்வானாயின், அவனது பாவங்கள் அவனை விட்டு விலகி ஓடி விடும். 09. கள் குடிப்பவனும், மாமிசம் உண்பவனின் தலையில் ருத்ராட்சம் படுமேயானால், அவனது பாவங்கள் அனைத்தும் விலகும். 

10. ருத்ராட்ச மாலையை ஒருவன் வெறுமனே கையில் பிடித்திருந்தாலும், நான்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும், உப நிடதங்களையும் கற்று அறிந்தவனை விட சிறப்புப் பெறுவான். அனைத்துக் கல்வி வேள்விகளும் அவன் வசமாகின்றன. பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனை விட அதிக பலனைப் பெறுகிறான். 

11. ஒருவன் மரணம் அடையும் தருவாயில் ருத்ராட்சத்தை தரித்துக் கொண்டிருப்பானாகில், அவன் இறந்த பின் ருத்ர லோகத்தை அடைகிறான். 

12. பிறப்பால் ஒருவன் பிராமணனோ அல்லது சண்டாளனோ அல்லது மிலேச்சனோ; உண்ணக் கூடாததை உண்பவனோ யாராகிலும், அவன் ருத்ராட்சத்தை அணிவானாகில், அவன் ருத்ரனுக்கு இணை ஆகிறான்.

13. ருத்ராட்சத்தைத் தலையில் தரிப்பவன் கோடி புண்ணியங்களைப் பெறுவான். 

14. காதுகளில் அணிபவன் பத்து கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான். 

15. கழுத்தில் அணிபவன் நூறு கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான். 

16. பூணூலில் அணிபவன் ஆயிரம் கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான். 

17. கைகளில் அணிபவன் லட்சம் கோடிப் புண்ணியத்தைப் பெறுகிறான். 

18. இடுப்பில் அணிபவன் மோட்சத்தை அடைகிறான். 

19. ருத்ராட்சத்தை அணிந்தவாறு, வேத நியமங்களை ஒருவன் கடைப் பிடிப்பானாகில், அவன் பெறும் பலன்களை அளவிட முடியாது. 

20. கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்தவன் இந்த உலகத் தளைகளில் இருந்து விடுபடுகிறான். 

21. ருத்ராட்சத்தை உடலில் அணியா விட்டாலும், அதைப் பூஜிப்பவனும் கூட சிவ லோகம் சென்றடைந்து, சிவனைப் போலவே வணங்கப்படுகிறான். 

22. ருத்ராட்சம் அணிந்தவன் சிவ பெருமானைப் போலவே முப்பத்து முக்கோடி தேவர்களாலும் வணங்கப்படுகிறான். 

23. ருத்ராட்சத்தைத் தலையில் தரித்து ஒருவன் நீராடுவான் எனில், ருத்ராட்சத்தைத் தொட்ட நீர் அவன் உடலைத் தீண்டுமாயின், அது கங்கையில் நீராடியதை விட அதிகப் புண்ணியப் பலன்களைத் தரும். 

24. மனிதன் மட்டுமல்ல; ஓர் அறிவுள்ள பிராணிகள் முதல் ஐந்தறிவுள்ள உயிர்கள் வரை ருத்ராட்சத்தோடு சம்பந்தம் பெற்றால், அவை அனைத்தும் மறு பிறவியில் சிவ லோகத்தை அடைந்தே தீரும். 

25. பல்வேறு யுகங்களில் நாயும், கழுதையும், கோழியும், ருத்ராட்சத்தோடு தொடர்பு பெற்றதால், அவை சிவ லோகம் சென்றடைந்தன. மறு ஜென்மத்தில் சிறந்த சிவ பக்தர்களாகப் பிறந்தன. 

26. பல நூறு பிறவிகளில் பல கோடி புண்ணியம் செய்தால் மட்டுமே, இந்த பிறவியில் ருத்ராட்சம் அணியும் பாக்கியம் நமக்குக் கிட்டும். 

27. ருத்ராட்சத்தை தானம் செய்பவர்களுக்கும், அணிய வைப்பவனுக்கு இன்னொரு பிறவி இந்த பூமியில் இனி கிடையாது. இந்த வரிகள் அனைத்தும் சிவ மஹா புராணத்தில் பார்வதி தேவிக்கு ஸ்ரீ பரமேஸ்வரனே கூறுகிறார்.
 

Share this story