16-ந்தேதி சபரிமலை நடை திறப்பு : தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு

By 
 16th Sabarimala Walk Opening Devasthanam Important Announcement

சபரி மலையில், ஐப்பசி மாத பூஜையையொட்டி, சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. 

தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைக்கிறார். 17-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 

அன்றைய தினம், காலையில் புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தொடர்ந்து, 21-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.

இந்த நாட்களில், அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின்பு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். 

பின்னர், மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக, தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில், சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் முன் பதிவு  தொடங்கியது.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். 

மருத்துவச் சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
*

Share this story