சங்கரன் கோவில் ஆடித்தபசு : இன்று நேரலை ஒளிபரப்பு

By 
 Sankaran Kovil Aadithabasu Live broadcast today

தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில், ஆடித்தபசு திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

விழா நாட்களில், அந்தந்த மண்டகப்படியில் சுவாமி-அம்பாளுக்கு பூஜைகள் நடத்தாமல், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவில் உள்பிரகாரத்திலேயே சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில், அந்தந்த மண்டகபடிதாரர்கள் மட்டும் 50 பேர் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

விழாவின் சிகர நாளான ஆடித்தபசு திருவிழா, இன்று வெள்ளிக்கிழமை பௌர்ணமி நாளில் நடைபெறுகிறது. 

வழக்கமாக, தெற்கு ரத வீதியில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடைபெறும் ஆடித்தபசு காட்சி, தற்போது கோவிலுக்குள்ளேயே எளிமையாக நடத்தப்படுகிறது.

மாலை 6 மணியளவில் ரிஷப வாகனத்தில் சுவாமி சங்கரநாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சி அளிக்கிறார். 

பின்னர், இரவு 8 மணியளவில், யானை வாகனத்தில் எழுந்தருளி, சங்கரலிங்க சுவாமியாக அம்பாளுக்கு காட்சி கொடுக்கிறார்.

பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Share this story