சத்தியவான்- சாவித்திரியும், காரடையான் நோன்பும்.!
 

By 
சத்தியவான்- சாவித்திரியும், காரடையான் நோன்பும்.!

கணவர், சத்தியவான் போல எவ்வித குறைவுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும் பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே ‘காரடையான் நோன்பு’ ஆகும். இதுதொடர்பான நிகழ்வுகளை காண்போம் வாங்க..

காதல் திருமணம் :

மந்திரதேசத்தை ஆட்சி செய்த அசுவபதி என்ற மன்னனின் மகள், சாவித்திரி. அசுவபதி தன்னுடைய மகளுக்கு, கணவனை அவளே தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அளித்திருந்தார். பருவ வயதை எட்டிய சாவித்திரி ஒருமுறை வனத்திற்குச் சென்றபோது, அங்கு சத்தியவானைக் கண்டாள். 

சத்தியவானின் தந்தை சாளுவதேசத்து மன்னன் துயமத்சேனன். அவர் சிறப்பான ஆட்சியை தந்த போதிலும், வயோதிகத்தால் கண்பார்வை குன்றியது. அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட எதிரிகள், அவரிடம் இருந்து நாட்டை பறித்துக் கொண்டு சத்தியவானையும், அவனது பெற்றோரையும் காட்டிற்கு துரத்திவிட்டனர்.

சத்தியவானுக்கு தந்தை இழந்த நாட்டைத் திரும்பப் பெற்று, அரசாளவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், வயதான பெற்றோர்களை தனித்து விட்டுச் செல்ல விரும்பாததால், அவர்களுக்கு பணிவிடை செய்தவாறு காட்டிலேயே காலத்தைக் கழித்தான். 

சத்தியவானைப் பற்றி அறிந்ததும், அவன் மீது சாவித்திரிக்கு காதல் உண்டானது. அவனை திருமணம் செய்வது பற்றி, தன்னுடைய தந்தையான அசுவபதியிடம் சொன்னாள். அவரும் திருமண ஏற்பாடுகளைச் செய்து, மணம் முடித்து வைத்தார்.

திருமணத்திற்குப் பின் கணவனுடன் வாழ வேண்டும் என்ற நியமத்திற்கு இணங்க, சத்தியவானுடன் காட்டிலேயே வசிக்கத் தொடங்கினாள், சாவித்திரி. அரண்மனையில் பல பணியாளர்களுக்கு மத்தியில் வாழ்ந்தவள் என்பதால், காட்டில் சில சிரமங்களைச் சந்தித்தாலும், மனதளவில் கணவனோடு மகிழ்ச்சியாகவே இருந்தாள். 

தன் கணவனின் ஆயுளுக்காகவும், தன் மாங்கல்ய பாக்கியத்திற்காகவும், பல விரதங்களை அவள் கடைப்பிடித்து வந்தாள்.

தீர்க்க சுமங்கலி பவ :

வாழ்க்கைப் பயணத்தில் விதி யாரை விட்டது. ஒரு நாள், விறகு சேகரித்து வருவதற்காக காட்டிற்குச் சென்றான், சத்தியவான். சாவித்திரியும் அவனோடு சென்றிருந்தாள். வேலைக்கு நடுவே நண்பகல் வேளையில் இளைப்பாறுவதற்காக மரத்தடியில் சிறிது நேரம் ஓய்வெடுத்தான், சத்தியவான். 

அப்போது எமதர்மன் வந்து, சத்தியவானின் உயிரைப் பறித்துச் சென்றான். 

அவனது ஜாதத்தில் குறுகிய காலமே வாழ்வான் என்று விதி இருந்ததால், எமன் தன் வேலையை செய்தான். அப்போது சாவித்திரி, தன்னுடைய கற்புத் திறத்தால், எமதர்மனின் உருவத்தைக் கண்டாள். உடனே கணவனின் உடலைக் கீழே கிடத்திவிட்டு, எமனைப் பின் தொடர்ந்தாள்.

இதைக்கண்டு அதிர்ந்த எமதர்மன், அவளைத் திரும்பிப் போகும்படி வலியுறுத்தினார். 
எதிர்பாராதவிதமாக எமனின் காலில் விழுந்தாள் சாவித்திரி. தன் காலில் விழுந்தது ஒரு பெண் என்ற அளவில், அவளை ‘தீர்க்க சுமங்கலி பவ’ என்று வாழ்த்திவிட்டார், எமதர்மன். அப்படி வாழ்த்திய பிறகே அவருக்குப் புரிந்தது, தான் அவளது கணவனின் உயிரைத்தான் பறித்து வந்தோம் என்பது.

'நீங்கள் வாழ்த்தியது உண்மையானால் அதன்படி, நான் வாழ அருள்புரியுங்கள். நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன். 

நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும்' என்று கேட்டாள்.

சாவித்திரியின் புத்திசாலித்தனத்தை ரசித்த எமதர்மர், 'இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது. எனவே, நீ கேட்பதை என்னால் செய்ய இயலாது. அதற்குப் பதிலாக, வேறு எந்த வரம் கேட்டாலும் தருகிறேன்' என்றார்.

சாவித்திரி சமயோசிதமாக, 'என் மாமனார், மாமியார் மீண்டும் கண் பார்வை பெறவேண்டும். இழந்த நாட்டை திரும்பப் பெற்று, ஆட்சிபுரிய வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு, ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும்” என்றாள்.

சற்றும் யோசிக்காத எமதர்மன், அவள்கேட்ட அனைத்து வரங்களையும் தருவதாக வாக்களித்தார். 


அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாவித்திரி, 'எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே. ஆகவே அவரது உயிரை திரும்பக் கொடுங்கள்' என யாசித்தாள்.

எமதர்மனின் அருளாசி :

சாவித்திரியின் பதிபக்தியை மெச்சிய எமன், 'இதுவரை என்னை யாரும் பார்த்தது இல்லை. உன் கற்பின் மகிமையால் நீ, என்னைப் பார்த்தது மட்டுமின்றி, என்னிடமே வாதம் செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டாய். நீ என்னிடம் கேட்டுப் பெற்ற வரங்கள் அனைத்தும் கிடைக்கும். 

மாசியும் பங்குனியும் சேரும் சமயத்தில், உன் கணவன் பிழைப்பான். உலகம் உள்ளளவும், உன்னை நினைத்து விரதம் இருப்பவர்களுக்கு, உன் ஆசி கிடைக்கட்டும். அந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், மனமொத்த தம்பதியராக வாழ்வார்கள்' என்று அருளாசி கூறி மறைந்தார்.

சாவித்திரி காட்டில் கணவனை விட்டுச் சென்ற இடத்திற்குத் திரும்பி வந்து, அவன் உடலைத் தன் மடியில் கிடத்தினாள். சிறிது நேரத்தில் தூக்கத்தில் இருந்து விழிப்பதுபோல் சத்தியவான் விழித் தெழுந்தான்.

அவன் உயிரை எமன் எடுத்துச் சென்றதையும், எமனுடன் போராடி அவன் உயிரையும், மேலும் பல வரங்களையும் பெற்று வந்த விவரத்தையும் சாவித்திரி கூறினாள். சாவித்திரியும் சத்தியவானும் தங்கள் குடிலுக்குத் திரும்பி வந்தனர். 

சாவித்திரி எமனிடம் பெற்ற வரத்தின்படி, சத்தியவானின் பெற்றோர் கண்பார்வை பெற்றதுடன், இழந்த நாட்டையும் திரும்பப் பெற்றனர்.

மாங்கல்ய பாக்கியம் :

எமனுடன் வாதாடி இறந்த தன் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரியின் பதிவிரதத்தைப் போற்றவும், தங்கள் கணவர், சத்தியவான் போல எவ்வித குறைவுமின்றி, நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும் பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே ‘காரடையான் நோன்பு’ ஆகும்.
 

Share this story