சதுரகிரி மகாலிங்கம் கோவில் : பிரதோஷ-பௌர்ணமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
மலைமேல் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
கோவில் அமைந்துள்ள பகுதி வனத்துறைக்கு உட்பட்டதால், பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது.
இந்த மாதத்தில், ஆடி பிரதோஷம் மற்றும் நாளை பௌர்ணமியை முன்னிட்டு, சதுரகிரி மலைக்கு செல்ல, நேற்றிலிருந்து பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
24-ந்தேதி வரை, 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
மலை ஏற வரும் பக்தர்கள், அடிவாரத்தில் கிருமி நாசினியால் கைகளை சுத்தப்படுத்த வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், போதிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்றவை வலியுறுத்தப்பட்டுள்ளன.
பீடி, சிகரெட் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதியில்லை.
மலைப் பகுதியில், மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள்' என வனத்துறை தெரிவித்துள்ளது.