கூர்ம அவதாரம், கூறுவது என்ன?

திருமாலின் தசாவதாரங்கள் மிகவும் சிறப்புக்குரியவை. அதில், 2-வது அவதாரமான ‘கூர்ம அவதாரம்’ முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
ஏனெனில், மற்ற அவதாரங்கள் அனைத்துமே, ஏதோ ஒரு அசுர அழிவை முன்னிறுத்தியே எடுக்கப்பட்டவை. ஆனால் கூர்ம அவதாரம், மற்றவர்களின் நலனுக்காக திருமாலால் எடுக்கப்பட்டது. எனவே தான், மற்ற அவதாரங்களில் இருந்து கூர்ம அவதாரம், வேறுபட்டு நிற்கிறது.
வெற்றி சாத்தியப்படும் :
துர்வாச முனிவரின் சாபம் காரணமாக, இந்திரன் தன்னுடைய ராஜ்ஜியத்தை இழந்து, தேவர்கள் அனைவரும் அசுரர்களிடம் தோல்வியடையும் நிலை உருவானது. இதையடுத்து தேவர்களுக்கு, மகாவிஷ்ணு ஒரு உபாயம் சொன்னார்.
அதன்படி திருப்பாற்கடலை, மந்தார மலையைக் கொண்டு வாசுகி பாம்பை கயிறாக வைத்து கடைந்தால், அமிர்தம் கிடைக்கும். அதைப் பருகுவதால், தேவர்களின் வெற்றி சாத்தியப்படும் என்று கூறினார்.
ஆனால், பாற்கடலை கடைவதற்கு அசுரர்களின் உதவியும் தேவைப்பட்டது. இதையடுத்து தேவர்கள், அசுரர்கள் இணைந்து, திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது மந்தார மலை சரியத் தொடங்கியது.
இதையடுத்து மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) வடிவம் எடுத்து, கடலுக்கடியில் சென்று மந்தார மலையை தாங்கிக்கொண்டார். இதையடுத்து, திருப்பாற்கடலில் இருந்து பல பொருட்களும், அப்ரசஸ்களும், தெய்வ சக்தி பெற்றவர்களும் வெளிப்பட்டனர்.
இப்படி தேவர்களுக்கும், மக்களுக்கும் நன்மை அளிப்பதற்காக எடுக்கப்பட்டது கூர்ம அவதாரம்.
அமைவிடம் :
தமிழ்நாட்டில் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில், தசாவதார சன்னிதியில் கூர்மநாதரை தரிசிக்கலாம். அதே போல், சென்னை பெசன்ட்நகரில் உள்ள அஷ்டலட்சுமி ஆலயத்தில் உள்ள தசாவதார சன்னிதியிலும் கூர்மநாதர் அருள்கிறார்.
ஆனால், கூர்மநாதருக்கு தனிக்கோவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகூர்மம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. மகா விஷ்ணுவின் கூர்ம அவதாரத்திற்கான ஒரே கோவிலாக இது மட்டுமே திகழ்கிறது.
இந்த ஆலயத்தில், கூர்மநாதர் என்ற பெயரில் இறைவன் அருள்பாலித்து வருகிறார். தாயாரின் திருநாமம், கூர்மநாயகி என்பதாகும்.