'சித்தர்கள்'.. என்பவர் யார்?

By 
sithar11

சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்றும், சிந்தையுடையவர் என்றும் பொருள். சித்தர்கள் நம்மிடையே தோன்றி வாழும்போதே பல அற்புதங்களை நிகழ்த்தி, முக்தியடைந்த பின்பும் தனது பக்தர்களுக்கு திருவருள் புரிந்து கொண்டிருக்கும் சித்தர்களை வணங்குவது அந்த சிவபெருமானையே வணங்குவதற்கு சமம் என பார்க்கப்படுகிறது. 

சிவத்தை அகக்கண்ணால் உணர்ந்து, தியானித்து, தரிசனம் செய்து ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்தர்களது செயலாகும். சித்தர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் கிடையாது.

மக்களின் பாவங்களையும், மன வேதனைகளையும் சித்தர்கள் உள்வாங்கிக் கொள்வதால், அதன் தாக்கத்தினால் அவர்களுக்கு நோய்கள் ஏற்படும். ஆனாலும் அந்த நோயின் வலியும், வேதனையும் அவர்களைத் தாக்காது. ரமண மகரிஷி, ராம்சுரத்குமார் போன்ற மாபெரும் மகான்களை நோய்கள் பற்றினாலும் கூட அவர்கள் அதை உணர்ந்தது இல்லை. 

நமது பாவங்களையும், வேதனைகளையும் தாங்கிக் கொண்டு திருவருள் புரிகின்ற சித்தர்களும், மகான்களும் இன்றளவும் நம் வீட்டையும், நாட்டையும் பாதுகாத்து வருகின்றனர்.

சித்தர்கள் மூன்று விதமான கட்டுப்பாடுகளை தன்னுள் கடைப்பிடித்து அதன்படி வாழ்ந்து வெற்றி கண்டு, சமத்துவத்தையும், சமநிலையையும் ஏற்படுத்திக் கொள்பவர்கள். 

அந்த மூன்று வகை கட்டுப்பாடுகள் என்பது, மூச்சை அடக்குதல் (பிராணயாமம்), விந்துவை வெளியிடாது அடக்கிக் காமத்தை வென்று எந்த வித ஆசைகளும் இல்லாத நிலையை அடைதல், இறுதியாக மனதை அடக்குதல் என்பவை ஆகும். சித்தர்களின் சிந்தை எப்போதும் சிவத்தோடு ஒன்றியே இருக்கும்.

மனிதர்களிடையே நிலவும் சாதி வேற்றுமைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் கடுமையாக எதிர்த்து புரட்சி செய்வதர்கள் சித்தர்கள். அவர்கள் தனது சித்தத்தால் சிவனைக் காணும் வரை, உடலை காக்கும் பொருட்டு திட ஆரோக்கியத்துடன் வைத்திருக்க காயகல்பம் உண்டவர்கள்.

சித்தர்கள் வானசாஸ்திரம், மாந்தீரிகம், வைத்தியம், இரசவாதம், சூத்திர சாஸ்திரம், யோகம் போன்ற நுட்பமான விஷயங்களை ஆய்வு செய்து பல அரிய நூல்களை இவ்வுலகுக்கு வழங்கியவர்கள். ஏழைகளின் நோய்களை தீர்ப்பதற்காக எளிய மருந்துகளை கண்டறிந்து அவர்களது துன்பத்தைப் போக்கினர். 

சித்தர்களில் பலர் யோகப் பயிற்சியாலும், சிலர் ஞானயோகப் பயிற்சியாலும் சித்த ஒழுக்கம் கண்டு சிவநிலை அடைந்தவர்கள். தங்களது மனோசக்தியால் நினைத்ததை சாதித்தவர்கள்.  பிரபஞ்ச ரகசியங்களை அறிந்து அவற்றை வெளியுலகுக்கு அளித்தவர்கள்.

சித்தர்கள் தாங்கள் கண்ட அனுபவங்களை மக்கள் பயன்படுத்தும் விதமாக, மிக மிக எளிமையான நடையிலும், இலக்கண நடையிலும் பாமர மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துள்ளனர்.

இத்தகைய சிறப்பு பெற்ற சித்தர்கள் தங்கள் திருமேனியை மறைத்துக் கொண்ட (சமாதி) இடங்கள்   எல்லாம் தெய்வீக சக்தி நிறைந்த திருக்கோயில்களாக கருதப்பட்டு போற்றப்படுகின்றன. மக்களும் சித்தர்களின் அருமை, பெருமைகளை உணர்ந்து அவர்களது திருவருள் வேண்டி அந்தந்த தலங்களுக்கு சென்று சித்தர்களை வழிபட்டு நன்மைகளைப் பெறுகின்றனர். 

Share this story