விநாயகர் சிலைகள் வைக்க, கடும் கட்டுப்பாடு : காவல்துறை நடவடிக்கை..

விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் இந்து அமைப்புகள் மற்றும் பொதுநல சங்கத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட இந்து அமைப்பினர் திட்டமிட்டு உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி தொடர்பாக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
பிரச்சினைக்குரிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்கக் கூடாது. சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்கும் போதே பிரச்சினைக்குரிய இடமாக கருதப்பட்டால் அந்த இடத்தில் எக்காரணத்தை கொண்டும் சிலைகளை வைக்கக் கூடாது. இதனை மீறி யாராவது சிலைகளை வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிலைகளை நிறுவும் இடத்தில் மாற்று மதத்தினர் புண்படும் வகையில் கோஷங்களை எழுப்பக் கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக சிலைகளை வைக்கக் கூடாது. சிலைகளை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். இதற்காக 17 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை மீறி மாற்று வழிகளில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
சிலைகளை கரைப்பதற்கு திருவொற்றியூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை, எண்ணூர் உள்ளிட்ட நான்கு இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். வேறு பகுதிகளில் குறிப்பாக அனுமதிக்கப்படாத இடங்களில் சிலைகளைக் கரைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
விநாயகர் சதுர்த்தி விழா மேடையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் விழா ஏற்பாடுகள் பணியில் இருக்க வேண்டும். விநாயகர் சிலைகளை அமைக்கும் இடத்தில் போடப்படும் பந்தல் தீ பிடிக்காத வகையில் அமைக் கப்பட்டிருக்க வேண்டும். பிற மதத்தினர் புண்படும் வகையில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்பது போன்ற 20-க்கு மேற்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தி தொடர்பாக 5 கட்டங்களாக ஆலோசனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
முதலில் தங்களது பகுதியில் சிலைகளை அமைப்பவர்களை அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் பிறகு உதவி கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள் ஆலோசனை நடத்துகிறார்கள். 3-வதாக துணை கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் குழு சிலை அமைப்பவர்களுடன் ஆலோசனை நடத்துகிறது.
இதன் பிறகு இணை கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். கடைசியாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் சிலைகளை அமைக்கும் அமைப்பினரின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கூடுதல் கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் கலந்து கொண்டு சிலைகளை கரைப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியான முறையில் நடத்தி முடிக்க, சென்னை போலீசாரும் தமிழக காவல்துறையினரும் முடிவு செய்து உள்ளனர்.