ஈசனை பிரிந்து, பூமி வந்த நந்தி.!
 

By 
Thank you for separating Aesan and coming to earth!

சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுபவர்கள், அங்கிருக்கும் நந்தியை தரிசனம் செய்யாமல் வரமாட்டார்கள். 

இன்னும் சொல்லப்போனால், நந்தியை தரிசித்து அவரிடம் அனுமதி பெற்ற பிறகே, நாம் ஈசனை வணங்க வேண்டும் என்பது வழிமுறை. 

அந்த வகையில் நந்தியும், சிவனும் பிரிக்க முடியாத சக்திகள். அப்படிப்பட்ட நந்தியே, ஒரு முறை கயிலாயத்தில் இருந்து ஈசனைப் பிரிந்து பூலோகம் வரும் நிலை ஏற்பட்டது. அந்தக் கதையைப் பார்ப்போம்.

தவம் :

சிவ பக்தனான அடிலகன் என்பவன், தன் இறுதிக்காலம் முடிந்து, கயிலாயம் சென்றான். அங்கே பார்வதிதேவி, சிவபெருமானை நினைத்து, தியானம் செய்து கொண்டிருந்தாள். கயிலாய வாசலில், நந்தியம்பெருமான் காவல் புரிந்து கொண்டிருந்தார். 

சிவ-பார்வதியை தரிசிக்க நினைத்து வந்த அடிலகன், நேராக பார்வதி தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றான். நந்திதேவரும், ஈசனின் பக்தன்தானே என்று அவனை உள்ளே விட்டுவிட்டார்.

சாபம் :

அடிலகன் உள்ளே சென்றதும், பார்வதியைக் கண்டு 'தாயே..' என்று பெருங்குரலெடுத்து வணங்கினான். அந்த சத்தத்தில் பார்வதியின் தியானம் கலைந்தது. பக்தனை கடிந்துகொள்ள இங்கே வழியில்லை. 

அதனால், தன் பணியை சரிவர செய்யாத நந்தியை அழைத்தாள், பார்வதி. 'நான் தியானத்தில் இருந்து எழுந்ததும், பக்தனை உள்ளே அனுமதித்திருக்கலாம். நீ உன்னுடைய பணியை முறையாகச் செய்யவில்லை' என்று கடிந்துகொண்டாள். 

அப்போது அங்கு வந்த ஈசன், நடந்ததை அறிந்துகொண்டு, 'நந்தி.. பணியில் இருந்து தவறிய நீ.. பூலோகத்தில் பிறந்து சிலகாலம் வாழ்வாயாக' என்று சாபம் அளித்துவிட்டார்.

புதல்வன் :

அந்த நேரத்தில் பூமியில் சிலாதர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவரது ஆசிரமத்திற்கு ஒரு முறை சப்தரிஷிகளும் வந்தனர். அவர்களுக்கு சிலாதரின் மனைவி உணவு பரிமாறினாள். 

ஆனால் சப்தரிஷிகளும், 'குழந்தை இல்லாத வீட்டில் துறவிகள் உண்ணக்கூடாது' என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதனால், வருத்தம் அடைந்த சிலாதரும், அவரது மனைவியும், இறைவனிடம் மனமுருக வேண்டினர். இதனை அறிந்த ஈசன், நந்தியம்பெருமானை, அவர்களின் புதல்வனாக்க முடிவு செய்தார். 

அதன்படி, நந்தியை ஒரு பெட்டியில் வைத்து பூட்டி சிலாதரின் ஆசிரமம் அருகே வைத்துவிட்டார். சிலாதரின் கண்ணில், அந்தப் பெட்டி தென்பட்டது. 

அவர் அதைத் திறந்து பார்த்தபோது, காளையின் முகம், மனித உடல் கொண்ட ஒரு குழந்தை அதற்குள் இருந்தது.

இறைவன் தனக்கு அளித்த பிள்ளை என்று கருதிய சிலாதர், 'இறைவா.. நற்குழந்தை ஒன்றை தந்திருக்கக் கூடாதா? காளை முகம் கொண்ட குழந்தையை ஊரார் எப்படி ஏற்பார்கள்?' என்று ஈசனிடம் வேண்டினார்.

அப்போது, அங்கே ஒரு அசரீரி ஒலித்தது. 'சிலாதா.. வந்திருப்பது என்னுடைய காவலன் நந்தி. ஒரு சாபத்தால் அவன் உன்னிடம் வளர வந்துள்ளான். அவனுக்கு அழகான முகம் தருகிறேன். ஆனால், அவனுடைய ஆயுள் காலம் வெறும் 12 ஆண்டுகள்தான் இருக்கும். அதன் பிறகு, அவனோடு நீங்களும் கயிலாயம் வந்துவிடுங்கள்' என்றார்.

அதைக்கேட்ட சிலாதர், தன் பிள்ளையின் ஆயுள் குறைவு என்றாலும், அவன்தான் நம்மை கயிலாயம் அழைத்துச் செல்லப்போகிறான் என்ற மகிழ்ச்சியில் அதனை ஏற்றுக்கொண்டார்.

மீண்டும் பதவி :

தன் மனைவியிடம் குழந்தையை ஒப்படைத்தார். சிவலோகத்தில் இருந்து கிடைத்த பிள்ளை என்பதால், அந்தக் குழந்தை பார்த்தவுடன், பலரின் நோய் நீங்கியது. பலரது பாவம் பறந்தோடியது. 

நந்தி தேவர், தினமும் பிரதோஷ வேளையில் தியானத்தில் ஈடுபடுவார். தான் வாழ்ந்த 12 ஆண்டுகளில், பல அற்புதங்களை நிகழ்த்திய நந்தியம்பெருமான், தன் பெற்றோருடன் கயிலாயம் சென்று, இழந்த பதவியை மீண்டும் பெற்றார்.

Share this story