சிவபக்தியில் முதல்வன்

By 
The first in Shiva devotion

'பக்தி என்னதான் செய்யாது? எதைத்தான் சாதிக்காது? படிப்பறிவில்லாததொரு காட்டுமிராண்டி, பரம பக்தர்களுள், தன் களங்கமற்ற பக்தியினால், முதன்மையானவனாக ஆகிவிட்டானே! 

இத்தனைக்கும், அந்த திண்ணன் செய்ததெல்லாம் உலகியலில் செய்யத் தகாத மஹா பாபங்களல்லவா? 

காட்டிலும் மேட்டிலும் நடந்து, தேய்ந்த செருப்பினால் சிவலிங்கத்தின் மீதிருந்த நிர்மால்யங்களை அவன் களைந்தால், அதை வேதோக்தமாக செய்யப்பட்ட கூர்ச்சத்தினால் களையப்பட்டதாக இறைவன் ஏற்றுக் கொண்டார். 

பாத்திரம் இல்லாததால், தன் வாய் நிறைய தண்ணீரை உறிஞ்சி வந்து, லிங்கத்தின் மீது அவன் எச்சில் நீரை உமிழ்ந்தால், அதை அவர் கங்காதி நதிகளிலிருந்து கொணர்ந்து ருத்ராபிஷேகம் செய்ததாக ஏற்றுக்கொண்டார். 

ருசியாக இருக்கிறதா? என தான் உண்டு பார்த்த மிச்சமான பன்றி மாமிசத்தை அவன் தந்தால், அதை சாஸ்த்ரோக்தமாக, ஆசாரம் தவறாது செய்யப்பட்ட நிவேதனமாக அவர் ஏற்றுக் கொண்டார். 

அவ்வாறு ஏற்றுக் கொண்டு, அவனை பக்தர்களுள் முதலாவதாக செய்துவிட்டாரே! என்ன அதிசயம்!' என வியக்கிறார் ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள். கண்ணப்ப நாயனாரைப் பற்றி தன் ‘சிவானந்தலஹரி’யில். 

மேலும், அதே நூலில் பக்தியின் இலக்கணத்தையும் கூறுகிறார் அவர்.

'ஏறு அழிஞ்சில் மரத்தின் விதை தெறித்து, எங்கே விழுந்தாலும் மேல்ல நகர்ந்து, தாய் மரத்தில் ஏறி ஒன்றுவது போலவும், 

காந்தத்தை நோக்கி இரும்பு ஊசியானது நகர்ந்து ஒட்டிக்கொள்வது போலவும், 

தன் நாதனிடம் விரைந்து வந்து, ஒரு பத்தினிப்பெண் ஒன்றுவது போலவும், 

மரத்தின் மேல் அருகிலிருக்கும் ஒரு கொடியானது வந்து படர்வது போலவும், 

கடலில் விரைந்து வந்து ஒரு நதியானது கலப்பது போலவும், இறைவனின் பாதங்களில் மனத்தாலும் செயலாலும் சென்று இயற்கையாக கலப்பதுதான் பக்தி எனப்படும்' என்கிறார்.


 

Share this story