ஆசியாவில் மிகப்பெரிதன்றோ; ஆழித்தேராம்.. ஆரூர்த்தேர்.!
 

By 
Destroy the biggest in Asia .. Arurter.!

திருவாரூர் தேரழகு என்பது சொல்வழக்கு. இத்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. 

மிக மிகப் பிரம்மாண்டமான இத்தேர் குறித்த வரலாற்றுச்சுவடுகள் குறித்து இங்கே பார்ப்போம்.

எண்கோண வடிவில் அமைந்த இந்த ஆழித்தேர், 4 நிலைகளையும், 7 அடுக்குகளையும் கொண்டது.

தேரை இழுத்துச் செல்வதுபோல அமைந்த 4 குதிரைகள், 32 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டவை.

தேரை இழுக்க 4 வடங்கள் பொருத்தப்படும். இவை ஒவ்வொன்றும் 425 அடி நீளம் கொண்டவை. கயிற்றின் சுற்றளவு 21 அங்குலம் ஆகும். 

‘திருவாரூர் தேரழகு’ என்பது சொல் வழக்கு. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் இது.

* ‘ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே..’ என்ற திருநாவுக்கரசரின் பதிகம் மூலம், கி.பி. 5-ம் நூற்றாண்டு காலத்திலேயே திருவாரூர் தேர் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது.

* திருவாரூர் தேரை ‘ஆழித்தேர்’ என்று வர்ணிப்பார்கள். கடல் போன்று பரந்து விரிந்தது என்பதால், இந்தப் பெயர் வந்தது.

* அலங்கரிக்கப்படாத தேரின் உயரம் 30 அடி. விமானம் வரையான தேர்ச்சீலை அலங்காரப் பகுதியின் உயரம் 48 அடி, விமானம் 12 அடி, தேர் கலசம் 6 அடி என முழுமையான அலங்காரத்துடன் திகழும் ஆழித்தேரின் உயரம் 96 அடி.

* தேர் அலங்காரத்திற்காக 5 டன் பனஞ்சப்பைகள், 50 டன் மூங்கில், 10 டன் சவுக்கு கம்புகள், ஒரு டன் கயிறு, ½ டன் துணிகள் மற்றும் சிறுசிறு பொம்மைகள் பயன்படுத்தப்படுகின்றன.

* அலங்கரிக்கப்படாத நிலையில் தேரின் எடை 220 டன். அலங்கரிப்பட்டதும், அதனை எடை 350 டன்னை எட்டிவிடும்.

தேர் ‘தடம்’ :

பல ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேர் என்பதால், அதனை பழுதுபார்த்தனர். அப்போது, திருச்சி பெல் நிறுவனம், 10 சக்கரத்திற்கு பதிலாக 4 இரும்பு சக்கரமும், ஹைட்ராலிக் பிரேக் அமைப்பும் ஏற்படுத்தியது. 

* 1748-ல் ஆழித் தேரோட்டம் நடந்ததற்கான குறிப்புகள் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள ஆவணத்தில் உள்ளன.

* 1926-ல் தேரோட்டம் நடைபெற்ற வேளையில் தேர் எரிந்துபோனது. அந்த தேருக்கு 10 சக்கரங்கள் இருந்துள்ளன.

* 1928-ல் புதிய தேர் உருவாக்கும் பணி தொடங்கியது.

* 1930-ல் தேர் செய்யும் பணி நிறைவுபெற்றது.

* 1948-ல் சில காரணங்களால் பல வருடங்கள் தேரோட்டம் தடைபட்டது.

* 1970-ல் அப்போதைய தமிழக அரசின் முயற்சியால் மீண்டும் தேரோட்டம் நடந்தது.

தியாகேசா :

* பண்டைய காலங்களில், இந்த பிரம்மாண்டமான தேரை இழுப்பதற்கு 12,000 பேர் தேவைப்பட்டனர் என கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது என்கிறார்கள். 

ஆள் பற்றாக்குறையால், மக்கள் வடம் பிடித்து இழுக்கும்போது, பின்புறத்தில் யானைகளை வைத்து முட்டித் தள்ளி, தேரை நகர்த்தியுள்ளனர். 

* தற்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க, யானைக்குப் பதிலாக 4 புல்டோசர்கள் கொண்டு தேர் இழுக்கப்படுகின்றன.

* ஆரூர் எனப்படும் திருவாரூரில், தியாகராஜர் கோயிலின் நான்கு மாட வீதிகளிலும், தேரோட்டம் வரும்போது, ‘ஆரூரா... தியாகேசா...’ எனும் கோஷங்களுடன் பக்தர்கள் மெய்சிலிர்த்து தரிசிப்பார்கள். 

அப்படி, தேர் வரும் இடங்களிலெல்லாம் ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர்மோர், பானகம், அன்னதானம், விசிறி முதலானவை வழங்கப்படும்.

* ஆழித் தேரானது, நான்கு நிலைகளையும், பூதப்பார், சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனம் பீடம் என 7 அடுக்குகளைக் கொண்டுள்ளது.

* இந்த தேரின் நான்காவது நிலையில்தான், உத்ஸவர் தியாகராஜ சுவாமி வீற்றிருப்பார். 

இந்த பீடம் மட்டுமே 31 அடி உயரமும், 31 அடி அகலமும் கொண்டது என்றால், அந்த பீடத்தின் பிரமாண்டமே சிலிர்க்கவைக்கிறதுதானே.!

* ஆழித் தேரை அலங்கரிக்கும் பணியானது, தேரோட்டத்துக்கு ஐந்தாறு நாட்கள் முன்னதாகவே நடைபெற்றுவிடுமாம். ஏராளமான மூங்கில் கழிகள் பயன்படுத்தப்படும். 

* தேருக்கான தேர்ச்சீலைகளே சுமார் 3 ஆயிரம் மீட்டர் அளவுக்கு வாங்கப்பட்டு அலங்கரிக்கப்படும் என்கிறார்கள் ஆலய நிர்வாகத்தினர்.

* தேரில், பிரம்மா தேரோட்டி பொம்மையும், நான்கு வேதங்களை முன்னிறுத்தும் பெரிய குதிரை பொம்மைகளும் என ஏராளமான பொம்மைகள் பொருத்தப்பட்டிருக்கும்.

* தேரை அலங்கரிக்கும்போது, 500 கிலோ எடையுடைய துணிகள், 50 டன் எடை கொண்ட கயிறுகள், 5 டன் பனைமரக் கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.

* திருவாரூர் தேரின் முன்புறத்தில் 4 பெரிய வடம் பிடிக்கும்  கயிறுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஒரு வடம் (கயிறு) 21 அங்குலம் சுற்றளவும் 425 அடி நீளம் கொண்டதாகவும் இருக்கின்றன.

* ஆழித்தேர் ஓடுவதை காண்பதைக் காட்டிலும், தியாகராஜ கோயிலின் நான்கு வீதிகளிலும் திரும்புவதை காண்பதற்கே, அதிக கூட்டம் கூடும். 

ஏனெனில், அவ்வளவு பிரம்மாண்டமான அந்தத் தேரின் சக்கரங்களை இரும்பு பிளேட்டுகளின் மீது மசையை கொட்டி, இழுத்து திருப்புவதைப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கும்.

Share this story