திருவண்ணாமலை கிரிவல தினங்களும் அதன் பலன்களும்..

By 
girivalam3

ஞாயிறு கிரிவலம் சிறந்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஞயிற்று கிழமைகளிலும் சூரிய பகவான் பூவுலகிற்கு ஏதேனும் ஒரு வடிவில் வந்து திருவண்ணாமலையைக் கிரிவலம் செய்வதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக இன்றும் திருவண்ணாமலையில் மலையை சூரியன் குறுக்காகக் கடக்காமல் வலம் வந்து செல்வதைகாட்டுகின்றனர். 

சூரியன் மலையை வலம் வருவது உலகில் வேறு எங்கும் காண முடியாத காட்சி இது. இந்த ஞாயிறு கிரிவலம் செய்பவர்கள் சிவலோகமாம் திருக்கயிலாயத்தில் தேவர்களாய் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்களாம். ஞாயிறு கிரிவலம் செய்தால் குடும்பப் பிரச்சனை காரணமாக பிரிந்து வாழும் தம்பதியர் ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ வலி பிறக்குமாம். 

திங்கள் கிரிவலம் பலன்கள்: திங்கட்கிழமை கிரிவலம் செய்யும் மானுடர்கள் ஏழுலோகத்தையும் ஆண்டு சிவஸ்வரூபத்தை அடைவர் என்று சொல்லப்படுகிறது. திங்கட்கிழமை கிரிவலத்தால் திருமணத்தடை அகலும் என்று நம்பப்படுகிறது. திங்கள் பௌர்ணமியில் திருவண்ணாமலையை வலம் வந்துதான் பிரம்ம சரஸ்வதி தேவியை மனம் செய்து கொண்டாராம். அதனால் அன்றைய தினம் கிரிவலம் செய்யின் எத்தகைய திருமணத்தடையும் அகன்று விடுமாம். 

திங்கட்கிழமை காலை 5.30 மணி முதல் 7.30 மணிக்குள்ளாக, அதாவது ராகு காலத்திற்கு முன் கிரிவலம் துவங்கி இடையில் ஏதேனும் ஒரு அம்மன் சந்நிதியில் ஏழைக் கன்னி பெண்களுக்கு பூச்சரம், மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, வளையல், வஸ்திரம் முதலான மங்களப் பொருட்களை தாம்பூலத்துடன் தானமாகக் கொடுக்கத் திருமணத் தடை நீங்குமாம். திங்களும் பௌர்ணமியும் சேரும் தினத்தன்று நீதித்துறையில் உள்ளவர்கள் கிரிவலம் வந்தால் அவர்கட்கு வாக்கு வன்மையும் வழக்கு வெற்றியும் ஏற்படுமாம். 

தொடர்ந்து நீதிமன்ற படிக்கட்டுகளை மிதித்து அல்லலுறும் அன்பர்களுக்கும் நெடுநாளாய்த் தீர்வு காணப்படாமல் இருக்கும் வழக்குகள் நல்ல முறையில் தீர்வு ஏற்படுமாம். செவ்வாய் கிரிவலம் பலன்கள்: செவ்வாய்க் கிழமைகளில் கிரிவலம் செய்வோமானால் கடன் தொல்லையும், வறுமையும் நீங்கி வளமான வாழ்க்கை நிலையைப் பெறலாம். 

விசாக நட்சத்திரம் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அண்ணாமலையைக் கிரிவலம் வந்தால் அண்ணாமலையார் தரிசனம் நிச்சயம் என்று கூறப்படுகிறது. செவ்வாய் கிரிவலத்தால் உத்தியோகம் நிமித்தமாய் ஏற்படும் பொறாமை, கலகம், அவமானம், பகையுணர்ச்சி ஆகியவைகள் நீங்கி உத்தியோக உயர்வு, இடமாற்றம், துன்பங்களில் இருந்து விடுதலை ஆகியவைகளைப் பெறுவார்களாம்.

புதன் கிழமையன்று கிரிவலம் செய்வருக்கு ஸ்ரீ பூத நாராயணப் பெருமாளே ஏதேனும் ஒரு வடிவில் துணை வந்து கிரிவலம் முழுவதும் வழிக்காட்டி செல்வாராம். இன்றைய கிரிவலத்தால் கலைகளெல்லாம் கசடற கற்கும் திறன் பெறுவார்களாம். நியாயமான உத்தியோக உயர்வும் , தொழில் திறமையும் ஏற்படும். வாராக் கடனும் வசூலாகும். பெண்களுக்கு தீர்க்க சுமங்கலித்துவமும் சந்தான பாக்கியமும் இந்த புதன் கிரிவலத்தால் கிட்டும் என்று கூறப்படுகிறது. 

வியாழன் கிரிவலம் பலன்கள்: குரு தட்சிணாமூர்த்திக்கு உகந்த நாள். அன்றைய தின கிரிவலத்தின் போது தட்சிணாமூர்த்தி சுவாமிகள் யாரேனும் ஒரு குருவின் வடிவிலே வெளிப்பட்டுக் காட்சி தருவாராம். இந்த குரு தரிசனமானது மயான பூமிகளைக் கண்டால் ஏற்படும் பயத்தைப் போக்குமாம். இறந்தவர்களுக்கான இறுதி மரியாதையை செலுத்தத் தவரியவர்களுக்குப் பிராயச்சித்த கிரிவலம் இதுவே ஆகும். வியாழன் கிரிவலத்தால் சகலவித திருமணத் தோஷங்களும் நீங்குவதுடனும், அவர்கள் அடுத்த பிறவியில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் குருவாக விளங்கும் சிறப்பைப் பெறுவார்களாம். 

வெள்ளி கிரிவலம் பலன்கள்: ஒரு காலத்தில் அசுரர்கள் தங்களுக்கு அளப்பரிய செல்வங்களை வழங்க வேண்டும் என்று திருமகளை வற்புறுத்தினார்களாம். ஆனால், திருமகளே அவர்களது பேராசைக்கு இணங்காமல் அவர்களிடம் இருந்து தப்பித்து திருவண்ணாமலைக்கு வந்து தைல எண்ணையில் தீபமாய் உறைந்து தீபமாக கிரிவலம் வந்தநாள் வெள்ளிக்கிழமை அதனால் வெள்ளிக்கிழமை கிரிவலம் வந்தால் இல்லறபெண்களுக்கு லக்ஷ்மி கடாட்சமும், இல்ல இன்பமும், அமைதியும் மாங்கல்ய பலமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. எதிரிகளால் ஏற்படுகின்ற பில்லி, சூனியம் ஏவல் முதலான துன்பங்களை அகற்றி மனக்கோளாறுகளை நீக்கவல்லது இந்த வெள்ளி கிரிவலம். 

சனிக் கிழமை கிரிவலம் செய்பவர்களுக்கு நவக்கோள்களும் பதினொன்றாம் இடத்தில் இருந்து கொண்டு அதற்கான சிறப்புப் பலன்களை கொடுப்பார்கள். இந்த சனி கிரிவலம் கண், காது, சுவாச வியாதிகள் ஆகியவற்றால் அவமதிப்படுவோருக்கு சிறந்த நிவாரணத்தை அளிக்க வல்லது. நரம்பு வியாதிகள், பக்கவாத வியாதிகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கிரிவலத்தால் பயன்பெறலாம். இன்றைய தினம் கிரிவலப் பாதையில் எமலிங்க தரிசனம் செய்வதால் தீராத நோய்களும் தீர்ந்து மரண பயம் நீங்குமாம். 

இவை மட்டுமன்றி, சிவராத்திரியிலும், வருடப்பிறப்பன்றும், ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களிலும் இந்த திரு அண்ணாமலையை வலம் வருபவர்கள் மேலே கூறப்பட்ட நன்மைகளைவிட மிக அதிகமான பலன்களை அடைவார்களாம். 


 

Share this story