திருவண்ணாமலை கோவில் தீபத் திருவிழா : நாளை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
 

Thiruvannamalai Temple Light Festival Bandakkal planting event tomorrow

திருண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. 

இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

மேலும், கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு, அரசு விதித்த கட்டுப்பாடுகளுடன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

மகா தீபம் :

கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர், கோவிலின் பின்புறம் உள்ள மலையைச் சுற்றி கிரிவலம் செல்கின்றனர். 

இந்த கோவிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில், கார்த்திகை தீபத் திருவிழா முக்கிய விழாவாகும். இவ்விழாவின் 10-ம் நாள் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

காலை 4.30 மணி :

இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா, வருகிற நவம்பர் மாதம் 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 19-ந் தேதி பரணி தீபமும், மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

இவ்விழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நாளை 16-ந் தேதி (வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் நடைபெற உள்ளது. 

அப்போது, கோவிலில் உள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். 

மேலும், பந்தக்காலுக்கும் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டு, கோவில் பிச்சகர் பந்தக்காலை ராஜகோபுரம் வரை சுமந்து வந்து, அங்கு பந்தக்காலிற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பந்தக்கால் நடப்படும். 

அதன் பின்னர், கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான அனைத்து பணிகளும் தொடங்கும்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
*

Share this story