திருச்செந்தூர் கோவில் ஆவணித்திருவிழா 4-ந்தேதி தொடக்கம்; நிகழ்ச்சிகள் விவரம்..

By 
tt1

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் மு.கார்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா வருகிற 4-ந்தேதி (திங்கள்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்று காலை 5 மணிக்கு திருவிழா கொடியேற்றப்படுகிறது. 

மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 8-ந்தேதி 5-ம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குட வருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். 

9-ந்தேதி 6-ம் திருவிழா அன்று காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா வரும். 10-ந்தேதி 7-ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து 8.45 மணிக்கு சுவாமி ஆறுமுகப்பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன்கட்டளை மண்டபத்தில் சேர்கிறார். 

அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 

11-ந்தேதி 8-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி எழுந்தருளி வீதி வலம் வந்து மேலக்கோவில் சேர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்று, பகல் 12 மணிக்கு பச்சை கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் வந்து சேர்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந்தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது. 

ஆவணித்திருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றம் மற்றும் 7-ம் திருவிழாவன்று அதிகாலை 1 மணிக்கும், மற்ற நாட்களில் கோவில் அதிகாலை 4 மணிக்கும் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

Share this story