வடபழனி முருகன் கோவில் : 23-ந்தேதி கும்பாபிஷேகம்

By 
Vadapalani Murugan Temple Kumbabhishekam on the 23rd

சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவில் சிறப்பு பெற்றது. இந்த கோவில் கும்பாபிஷேகம், வருகிற 23-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

இதற்காக ரூ. 2.56 கோடி செலவில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 12-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் தொடங்கப்பட்டது.

முகூர்த்தக்கால் :

கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கில் கோவில் மூடப்பட்டதால், கோவில் புனரமைப்புப் பணிகள் தாமதமானது. ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு மீண்டும் கோவில் திறக்கப்பட்டு முழுவீச்சில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றது.

தற்போது, இந்த திருப்பணிகள் முழுவதுமாக முடிவடைந்து கும்பாபிஷேகத்துக்காக கடந்த மாதம் 13-ந்தேதி யாகசாலை முகூர்த்தக்கால் நடப்பட்டது.

கோவில் முழுவதும் வர்ணம் பூசி, புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு கும்பாபிஷேகத்துக்கு தயார் நிலையில் உள்ளது.

புனித நீர் :

கும்பாபிஷேக விழாவின்போது, பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர் கொண்டு வந்து யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். 

இதற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி, துங்கபத்ரா, காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, தாமிரபரணி ஆகிய நதிகளில் இருந்தும், ராமேஸ்வரம் தீர்த்தக் கிணற்றில் இருந்தும் மற்றும் முருகனின் அறுபடை திருத்தலங்களில் இருந்தும் மொத்தம் 15 இடங்களில் இருந்து புனித நீர் வடபழனி முருகன் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.

இவை அனைத்தும் புதிய பித்தளைக் குடங்களில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

43 முகூர்த்த மண்டபங்கள் :

வருகிற 20-ந்தேதி வியாழக்கிழமை அன்று யாகசாலையில் வைக்கப்பட உள்ள 1300 கலசங்களில் புனித நீர் பகிரப்படும்.

அதன் பிறகு, யாக வேள்வி பூஜைக்கு பின்னர் ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களிலிலும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்படும்.

கோவிலில் முகூர்த்த நாட்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக, கோவில் வளாகத்தில் 43 முகூர்த்த மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story