வைகுண்ட ஏகாதசி : நிறைந்த பலன் தரும், விரதமும் வழிபாட்டு முறையும்..

By 
 Vaikunda Ekadasi Rich, fasting and worship ..

ஓராண்டின் அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்த பலனை வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருந்தால் பெற முடியும் என்கிறது விஷ்ணு புராணம். 

சாதாரண ஏகாதசி நாட்களில் விரதமிருக்க இயலாதவர்கள் கூட வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருப்பது அவசியம். 

அன்று அதிகாலையில், கோவில்களில் நடக்கும் சொர்க்கவாசல் வைபவத்தை தரிசிக்க வேண்டும். 

அதிலும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் தரிசிப்பது மிகச்சிறப்பு.

21 நாள் திருவிழா :

பூலோகத்தில், முதன் முதலில் சொர்க்க வாசல் திறந்த திருத்தலம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும், பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என வைகுண்ட ஏகாதசி திருவிழா 21 நாட்கள் கொண்டாடப்படும். 

ஸ்ரீரங்கத்தில், தினமும் காலை 9.15 மணி முதல் பகல் 1 மணி வரை பாசுரங்களை அபிநயத்துடன் ஆடிப்பாடும் அரையர் சேவையுடன் நம்பெருமாளை பக்தர்கள் தரிசிக்கலாம். 

பரமபத வாசல் :

பகல்பத்து உற்சவத்தின் பத்தாம் நாளன்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருள்வார்.

அடுத்தநாள் வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படும். பரமபத வாசல் என்றும் பெயர் கொண்ட இதனைக் கடக்க அதிகாலை 3.45 மணிக்கு ரத்தின அங்கியுடன் பெருமாள் கருவறையில் இருந்து கோலாகலமாகப் புறப்படுவார்.

நாழிகேட்டான் வாசல், கொடிமரம், ராஜமகேந்திரன் சுற்று வழியாக வந்து அதி காலை 5 மணிக்கு பரமபத வாசலைக் கடந்து அருள்பாலிப்பார்.

இதைத் தரிசிக்க கோவில் வளாகத்தில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா... ரங்கா... என திருநாமங்கள் முழங்கியபடி, பெருமாளுடன் சொர்க்கவாசலைக் கடப்பர். அன்று முதல் ராப்பத்து உற்சவம் துவங்கும்.

விரதம் இருக்கும் முறை :

ஏகாதசிக்கு முதல் நாள் தசமியன்று பகல் ஒருவேளை உண்ண வேண்டும். ஏகாதசியன்று எதுவும் சாப்பிடக் கூடாது. 

மறுநாள் துவாதசியன்று சூரிய உதயத்துக்குள் குளித்து, பெருமாளை வணங்கி, துளசி தீர்த்தம் குடித்து விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். 

அதன்பின் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டபின் ஓய்வெடுக்க வேண்டும்.

தசமி துவங்கி விரதம் முடியும் வரை ஸ்தோத்திரங்கள், சகஸ்ரநாமம், நாராயண ஜபம் செய்ய வேண்டும். கோவில்களில் செய்வது இன்னும் சிறப்பு.

விதிவிலக்கு :

ஏகாதசியன்று தண்ணீர் குடிக்கலாம். துளசி இலைகளை சாப்பிடலாம். முதியோர்கள், நோயாளிகள், பசி தாங்க இயலாதவர்கள் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஏகாதசியன்று சாப்பிட்டாலும், அதற்கு முன்னதாக பெருமாளை மனதார வழிபட்ட பின் சாப்பிடலாம் என்ற விதிவிலக்கும் உண்டு.

விரதமிருக்க வாய்ப்பில்லாதவர்கள் பெருமாளுக்கு படைக்கப்பட்ட பழம், பால் சாப்பிடலாம். பகல் பொழுதில், கோவிலில் அல்லது வீட்டு பூஜையறையில் இருந்தபடி, விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களைப் பாடலாம். 

மற்றவர்கள் கோவிந்தா... நாராயணா... என்ற திருநாமங்களை மட்டுமே ஜபிக்கலாம். நிறைந்த பலன் பெறலாம்.
*

Share this story