வரலட்சுமி விரதம் : வழிபாட்டு முறையும்.. பலன்களும்..

By 
vara1

தீர்க்க சுமங்கலி வரம் பெறவும், செல்வ வளம் பெருகவும், சகல ஐஸ்வரியங்களையும் பெறவும் வரலட்சுமி நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பெளர்ணமி தினத்திற்கு முன்வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்த விரதத்தின் போது சில விசயங்களை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்று ஆன்மீக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மறந்தும் கூட சில தவறுகளை செய்யக்கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. திருமணமான பெண்களும், திருமணத்திற்காக காத்திருக்கும் கன்னிப்பெண்களும் வரலட்சுமி விரதத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

கணவரின் ஆயுள் பலம் வேண்டி சுமங்கலிப்பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர். இந்த விரதம் கடைபிடிப்பதால் ஆயுள், ஆரோக்கியம் மட்டுமல்லாது செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. சில ஆண்டுகளில் ஆடி மாதத்திலும் இந்த விழா கொண்டாடப்படும். திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் வரலட்சுமி விரதத்தன்று புதுமணம் முடித்த பெண்ணிற்கு இந்நோன்பு எடுத்து வைக்கப்படும்.

புகுந்த வீட்டில் இந்நோன்பு அனுசரிக்கும் வழக்கம் உள்ளது. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. 

வரலட்சுமி விரதத்தின் போது வீடு சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம்தான் மகாலட்சுமிக்கு பிடித்தமானது. சூரிய உதயத்திற்கு முன்னாள் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். உங்க கையால் கோலம் போட்டு மகாலட்சுமியை அழைக்க வேண்டும். பூஜை செய்யப்போகும் இடத்தில் இழை கோலம் போட்டு காவியிட்டு ஒரு தட்டில் அட்சதையை பரப்பி அம்மனை ஆவாஹனம் செய்யப் போகும் கலசத்தை அதன் மீது வைக்க வேண்டும்.

கலசத்தினுள் அட்சதையுடன் வெற்றிலை பாக்கு, மஞ்சள் ஒரு வெள்ளிக் காசு மற்றும் ஒரு எலுமிச்சைப் பழமும் வைத்து மாவிலையை கலசத்தின் மீது வைத்து அதன் மீது தேங்காயை வைக்கிறோம். அம்மனின் முகத்தை கலசத்தோடு இணைத்து வைக்க வேண்டும். பட்டுத்துணியல் அவசியம் அம்மனை அலங்கரிக்க வேண்டும். சரிகை உள்ள துணியால் அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் நிறம், சந்தன நிறத்தில் வஸ்திரம் இருந்தால் அற்புதமானது.

வெள்ளை கறுப்பு நிறத்தில் வஸ்திரம் இருக்கக்கூடாது. கலசத்தில் ஸ்ரீ வரலட்சுமி நமஹ என்று இருக்க வேண்டும். அம்மன் அலங்காரம் செய்த உடன் முடிக்கயிறு தயாரிக்கும் போது 9 முடிச்சுகள் போட்டிருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலைதான் இந்த முடிச்சி போடவேண்டும். ஒன்பது முடிச்சு இருக்கும் நோன்புக்கயிறுகளை வயது மூத்த சுமங்கலிகள் கைகளால் கட்டிக்கெள்ள வேண்டும். வரலட்சுமி பூஜைக்கு சுமங்கலி பெண்களை குங்குமம் கொடுத்து அழைப்பது அவசியம்.

சர்க்கரைப் பொங்கல் பாயாசம், கொழுக்கட்டை நைவேத்தியம் செய்வது அவசியம். பூஜை செய்பவர்கள் பட்டு வஸ்திரம்தான் அவசியம் அணிய வேண்டும். சரிகை இருப்பது அவசியம். தலைகுளித்து விட்டு தலையை கட்டிக்கொண்டே பூஜை செய்யக்கூடாது தலையை நன்றாக காய வைத்து பின்னி பூஜை செய்ய அமரவேண்டும். தலையை விரித்துப்போட்டுக்கொண்டு பூஜை செய்யக்கூடாது. தலையில் இருந்து முடி கீழே விழுந்தால் சனி தோஷம் வந்து விடும். லட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக விநாயகர் வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.

வரலட்சுமி பூஜைக்கு சுமங்கலி பெண்களை அவசியம் அழைப்பது அவசியம். பூஜைக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், நோன்புக்கயிறு, வளையல்கள், வெற்றிலை பாக்கு, ரவிக்கை துணி கொடுத்து ஆசி பெற வேண்டும். வரலட்சுமி பூஜையை மனநிறைவோடு செய்ய வேண்டும். விரிவாக செய்ய முடியாதவர்கள் ஒரு ரூபாய்க்கு கற்பூரம் ஏற்றி வரலட்சுமியை வழிபட்டாலும் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

மஞ்சள் குங்குமம் பூ வைத்து முடி கயிறு வைத்து பூஜை செய்யலாம். எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால்தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர். வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும்.

லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும். வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
 

Share this story