பிரம்ம முகூர்த்தத்தில் எழுக..நன்மை பெறுக.!

By 
பிரம்ம முகூர்த்தத்தில் எழுக..நன்மை பெறுக.!

பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்தால் பல அற்புத நன்மைகள் நிகழ்வதாக சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. இது குறித்து இங்கே காண்போம்.

* பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவத்தை அனைவரும் உணர்ந்தே இருப்பார்கள். இரவில் உறங்கும் உயிர்கள், மீண்டும் மறுநாள் கண்விழித்து எழுவது என்பதே ஒரு மறுபிறவி போன்றதுதான். அதுவும் ஒரு உயிர் படைப்பு போன்றதுதான். 

அதனால்தான், ஒவ்வொரு நாளும் பொழுது விடியும் அதிகாலையான 4.30 மணி முதல் 6 மணி வரையான காலநேரத்தை, படைப்புக் கடவுளான பிரம்மாவுடன் ஒப்பிட்டு ‘பிரம்ம முகூர்த்தம்’ என்று அழைக்கிறார்கள்.

* பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்தால் பல அற்புத நன்மைகள் நிகழ்வதாக சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. 

இவை நம் உடலில் படும்போது, நரம்புகளுக்கு புத்துயிர் கிடைக்கின்றது. உற்சாகத்தையும், சுறுசுறுப்பையும் வழங்குகின்றது. கண்கள் -ஆரோக்கியத்தையும், உடல் - வலிமையும் பெறுகின்றன. 

அதனால்தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்.

* அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. எல்லாருமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வீட்டில் வேலை செய்ய வேண்டும். பின்பு குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வெடுக்க வேண்டும். உறங்க வேண்டிய நேரத்தில் விழித்திருந்தால், நோய்கள் எல்லாம் நம்மை நோக்கி வரும். 

அதனால்தான், பெரியோர்கள் அதிகாலையில் எழ வேண்டும் என்றார்கள். அந்த நேரத்தில் இறைவனிடம் வைக்கின்ற அனைத்துவித பிரார்த்தனைகள் கண்கூடாகவே நிறைவேறும்.

* சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில், சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. 

எனவே, அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது. இந்த அதிகாலை நேரத்தில் உடல் சுறுசுறுப்படையும் என்பதால், சத்தம் இல்லாமலும், பரபரப்பு இல்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்பதுதான். 

உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறானாம். அதனால்தான், அதிகாலையை ‘உஷத் காலம்’ என்கிறார்கள். 

இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள், அதிகாலையில் பூமியை நோக்கி பாய்வதால், அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுவது விசேஷமான பலனைத் தரும்.

* பிரம்ம முகூர்த்தத்தில் திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இந்த நேரம் எப்போதுமே சுபவேளை தான். 

இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து, நமது வேலையை செய்யத் தொடங்கினால், அன்று முழுவதும் வெற்றிதான். பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம், சகல சவுபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்.

* தெய்வீகத்தன்மை இருக்கக்கூடிய நேரம், பிரம்ம முகூர்த்தம். அந்த நேரத்தில் எழுந்து,  பணிகளைத் தொடங்கினால், வாழ்வில் மாற்றத்தை சந்திக்கலாம். நினைத்த காரியங்கள் நிறைவேறும். லட்சுமி கடாட்சம் இல்லத்தில் குடியேறும்.

Share this story