மருதமலையின் மூன்று தீர்த்தங்கள் அறிவோம்..

இயற்கையழகுமிகு மலைகளுக்கிடையில் இதயம் போல காட்சியளிக்கும் அழகிய மலைக்கோவிலாம் மருதமலை இதயத்தை ஈர்க்கிறது.
பேரெழில் வாய்ந்த முருகப்பெருமானின் பேரழகைக் கச்சியப்ப முனிவர், 'ஆயிரங்கோடி காமர் அழகெல்லாம் திரண்டு எழுந்த மேயின எனினும் செவ்வேள் விமலமாற் சரணந்தன்னில் தூய நல்லெழிலுக்கு ஆற்றாது என்றிடில் இணைய தொல்லோன் மாயிருவடிவிற்கெல்லாம் உவமையார் விடுக்க வல்லார்', என்று பாடுவார்.
அதேபோல், இத்திருக் கோவிலில் மருதமலையான், சிரசில் கண்டிகையுடனும், பின் பக்கம் குடுமியுடனும், கோவணங்கொண்டு, வலது திருக்கரத்தில் ஞானத்தண்டேந்தி, இடது திருக்கரத்தை இடையில் அமைத்து வினைகளை வேரறுத்து யமன் பயம் தீர்த்து உண்மையறிவை அறியச் செய்யும் நீண்ட வேலோடு உலகைக் காக்கும் மருதாசல மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினார்க்கு வரத்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே!
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றனுள் மூன்றாவதாக உள்ளது தீர்த்தம். நம் நாட்டில் விளங்கும் புனிதமுடைய பற்பல கிணறு, குளம், ஆறு, கடற்கரை இவையாவும் சிமயத்தன்மை பெற்றிருப்பதால் நீராடியோரது உடற்பிணியையும், பிறவிப்பிணியையும் அவை போக்குகின்றன.
இதனை திருநாவுக்கரசர், 'சென்ற நாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே' என்கிறார். இத்தலத்தின் தீர்த்தங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை. அவை, மருததீர்த்தம், கன்னி தீர்த்தம், கந்த தீர்த்தம் என்னும் தெய்வத்தன்மை மிக்க மூன்று தீர்த்தங்கள் உள்ளன.
இத்தீர்த்தங்களில் நீராடுவோர்க்குச் செல்வங்கள் பெருகும் எனவும், உடற்பிணி நீங்குமெனவும் திருத்துடிசைப் புராணம் கூறுகிறது.