எது உலகியல் : அறிந்துகொள், தெரிந்துகொள் : குரு
 

By 
What is secular know, know Guru

ஆசிரமத்தின் முன்பாக, ஏதோ யோசித்தபடி,
நடைபயின்று கொண்டிருந்த குருவின் அருகே சென்ற
சிஷ்யன் 'எதை அங்கீகரிப்பது, எதை நிராகரிப்பது
குருவே' என்றான்.

'அறிவை அங்கீகரிக்க அறிந்துகொள். அறியாமையை
நிராகரிக்கத் தெரிந்துகொள்'  என்றார் குரு.

இரண்டும் ஒன்றல்ல :

மீண்டும் சிஷ்யன், 'அறிந்துகொள்வது, தெரிந்து
கொள்வது இரண்டும் ஒன்றா, வேறு வேறா?'
என்றான். 

அதற்கு குரு, 'இரண்டும் ஒன்றல்ல, வேறு வேறுதான்.' என்றார்.

உடனே 'எப்படி?' என்று சிஷ்யன் கேட்க, குரு ஒரு கதையைச் சொல்லத் தொடங்கினார்,

'மன்னன் ஒருவன் காட்டில் வசித்த துறவி ஒருவரைக்
காணச் சென்றான். அவரிடம் சென்று, 'துறவியே, நான்
எப்போதும் அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும்.
அதற்கு ஒரு யோசனை சொல்லுங்கள்' என்றான்.

அப்படியா சரி என்ற துறவி, 'அதற்குப் புத்திசாலிகளை
எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள் போதும்'
என்றார்.

மன்னன் குழப்பமாகி, 'என்னைச் சுற்றி இருப்பவர்கள்
புத்திசாலிகள் என்று எப்படித் தெரிந்துகொள்வது?'
என்றான். 

'மிக மிக எளிது, நீங்கள் ஒரு புத்திசாலித்தனமான புதிரைச் சொல்லி பதிலைக்
கேளுங்கள் என்று சொல்லி, அருகிலிருந்த
ஆடுமேய்ப்பவனை அழைத்து, தம்பி.. உன் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உன் சகோதரனுமல்ல, சகோதரியுமல்ல,
அப்படியானால், அது யார்? என்றார்.

யோசனை :

ஆடு மேய்ப்பவன் யோசித்துவிட்டு,
'அது நான்தான் சாமி' என்றான்.

'நன்றி தம்பி' என்று கூறிய துறவி மன்னனிடம் திரும்பி,
'கேட்டீர்களா இப்படிக் கேளுங்கள்' என்றார். 

மன்னர் புன்னகையுடன் வணங்கிவிட்டு, தனது அரசவைக்கு வந்து, அமைச்சரை அழைத்து அதே கேள்வியைக் கேட்டார்.

அமைச்சருக்குத் தெரியவில்லை. சபையோரைக் கேட்டார்,
அவர்களுக்கும் தெரியவில்லை. ஒரே ஒரு காவலாளி
மாத்திரம் யோசித்து அமைச்சரிடம் பதில் சொன்னான்.

மகிழ்ந்துபோன அமைச்சர், மறுநாள் மன்னனிடம் சென்று,
'மன்னா, நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் நமது
‘காவலாளி தான்' என்றார்.

அதைக் கேட்ட மன்னன், கோபத்துடன் 'இது தவறான விடை அமைச்சரே, சரியான விடை அந்த ஆடுமேய்ப்பவன் என்றான்' என்ற குரு.

'இப்போது புரிகிறதா, எந்த ஒரு விஷயத்தையும்
மேலோட்டமாக அணுகினால், தெரிந்துகொள்ளத்தான்
முடியும். முழுமையாக அணுகினால்தான் அறிந்துகொள்ள முடியும்' என்றார்.

'சரியாக சொன்னீர்கள். இப்போது புரிகிறது குருவே.!' என்றான்.

Share this story