பூஜை அறையில் தண்ணீர் வைப்பதில் இத்தனை பலனா.?

By 
pojai

பூஜையின்போது, முக்கியமான சில வழக்கத்தை முறையாக கடைப்பிடித்துவந்தாலே, வீட்டில் ஆரோக்கியமும், சுபிட்சமும் தழைக்கும் என்கிறார்கள் பெரியவர்கள். அந்தவகையில், பூஜையறையில் தண்ணீர் வைக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

பூஜையின்போது மணியோசை எழுப்புவது கட்டாயம் என்பார்கள். காரணம், துர்சக்திகள் எதுவும் நெருங்காமல் இருப்பதற்குத்தான். இந்த மணியோசை எழுப்பப்படுகிறது. இந்த ஓசையானது தீய சக்திகளை விரட்டி, தெய்வீக சக்தியை வீட்டில் நிலவச் செய்யும் வல்லமை கொண்டது.

அந்தவகையில், வீட்டு பூஜைகளின்போது எப்போதும் தண்ணீர் பயன்படுத்துவார்கள். பூஜைகள் என்றாலே தீர்த்தம் கட்டாயம் இடம்பெற்றுவிடும். காரணம், தண்ணீர் வருண பகவானை குறிக்கிறது.

மேலும், பூஜையறையில் தண்ணீர் வைப்பது, இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக வைக்கப்படுகிறது. பூஜையறையில் தண்ணீர் வைப்பது, உங்கள் வீட்டிற்குள் செல்வத்தையும், ஐஸ்வர்யத்தையும் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

எனவே, செம்பு அல்லது பிற உலோக பாத்திரத்தில் தண்ணீர் வைப்பார்கள். பெரும்பாலும் செம்பு பயன்படுத்த காரணம், மிகவும் புனிதமான உலோகமாக செம்பு கருதப்படுகிறது.

அதுவும் இல்லாமல், பூஜையறையில் செம்பு பாத்திரத்தில் இப்படி தண்ணீர் வைத்திருந்தால், அது வீட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதேபோல, மண் பானையிலேயோ அல்லது வெள்ளி, ஈயம் பூசிய பித்தளை போன்ற வேறு வகையிலான உலோகத்திலோ தண்ணீரை நிரப்பி வைப்பது மிகவும் நல்லது. தினமும் தியானத்தில் அமர்ந்து நீங்கள் சொல்லும் மூலமந்திரத்தின் அதிர்வலைகள் அந்த தண்ணீரில் இறங்கும் என்பார்கள்..

ஆனால், எக்காரணம் கொண்டும் பூஜையின்போது இரும்பு பாத்திரங்களில் தண்ணீர் வைக்கக்கூடாது.. எமனுக்குரிய உலோகம் என்பதுடன், நேர்மறை சக்திகளை கிரகித்து கொள்ளவும் முடியாது என்பதால், இரும்பை தவிர்க்கலாம்.

வீட்டில் வைத்து வழிபடும் இந்த தண்ணீரில் துளசி இலைகளையும் போட்டு வைத்தால் இன்னும் நல்லது. இதேபோல் பூஜை அறையில் வைக்கக் கூடிய தண்ணீரில் ஒரு ஏலக்காய், ஒரு துண்டு பச்சை கற்பூரம், சிறிது வெட்டிவேர் போன்றவற்றையும் போட்டு வைக்கலாம். இதனால், நேர்மறை ஆற்றல் உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே எப்போதும் தங்கியிருக்கும்.

மொத்தத்தில், புனித நதியின் நீரை போல புனிதமாக கருதப்படுவதால்தான், பூஜையறையிலும், கோயில்களிலும் தண்ணீர் வைப்பது அவசியம் என்று அறிவுறுத்துகிறார்கள்.

பூஜையில் பயன்படுத்திய இந்த தண்ணீரை கொண்டு, வீட்டில் தெளித்தால், வீட்டிலிருக்கும் எதிர்மறை சக்திகளை கிரகித்துக்கொண்டு, நேர்மறை ஆற்றலை பரவவிடுவதாக ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால், அனைத்து தெய்வங்களும் குடும்ப உறுப்பினர்களும் பாதுகாக்கப்படுவார்கள். மனமும் அமைதி பெறும்.

ஆனால், ஒவ்வொரு நாளும் பூஜை அறையில் வைக்கும் தண்ணீரை மாற்றி வைக்க வேண்டும். அப்படி மாற்றும்போது, பழைய தண்ணீரை மறுநாள் கூரையின்மீது ஊற்றிவிட வேண்டும். இதனால் வீட்டை சுற்றிலும், துர்சக்திகள், எதிர்மறை சக்திகள் இருந்தாலும் விலகிவிடும்.
 

Share this story