யார் வீரன்.!

கர்ணன் தேரோட்டியின் மகனாக வளர்ந்தவன். அவன், இயல்பாகவே வில் வித்தை கற்று சிறந்து விளங்கினாலும், அவனுக்கு, குரு வேண்டும் என்பதற்காக துரோணாச்சாரியாரை அணுகினான். அவர் மறுத்துவிட்டார்.
கிருபாச்சாரியாரிடம் சென்று, தனக்கு குருவாக இருக்க கேட்டான். அது ஒரு அதிகாலை நேரம். கிருபா், வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொன்னார்.
கர்ணனும், தன்னுடைய அம்பை வில்லில் பூட்டினான். எய்த வேண்டிய நேரத்தில், வில்லை தாழ்த்தினான். கிருபர் 'என்னவாயிற்று?' என்றார்.
அதற்கு கர்ணன், 'குருவே, இது அதிகாலை நேரம். இந்த நேரத்தில், ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால், நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைத் தேடித்தான் செல்லும்.
என்னுடைய திறமைக்காக, அதைக் கொன்றுவிட்டால், நான் வீரனாவேன். ஆனால், அந்தப் பறவையின் குஞ்சுகள், அனாதைகளாகிவிடும்' என்றான்.
கிருபர், கண்கள் கலங்கிப்போனார். அவர், கர்ணனைப் பார்த்து, 'நீ சிறந்த வித்தையை கற்றிருக்கிறாயா, என எனக்கு தெரியாது. ஆனால், வேதத்தைக் கற்றிருக்கிறாய்' என்று பாராட்டினார்.
ஆம்..
நெஞ்சிலுள்ள ஈரம்போல, வெல்லும்
நிலையான வீரம் ஏது?