திமுகவில் விரிசலா? : அமைச்சர் கே.என்.நேரு பதில்
 

திமுகவில் விரிசலா  Reply by Minister KN Nehru

திருச்சியில், இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமை வெஸ்ட்ரி பள்ளியில் இன்று, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

திருச்சி மாவட்டத்தை பொறுத்தமட்டில், 22 லட்சத்து 82 ஆயிரத்து 52 பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். 

அதில், தற்போது வரை 11 லட்சத்து 71 ஆயிரத்து 738 பேருக்கு போடப்பட்டுள்ளது. இரண்டாவது தவணையாக 3 லட்சத்து 42,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மெகா தடுப்பூசி முகாமில், மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் 632 இடங்களில் முகாம்கள் அமைத்து ஒரே நாளில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 332 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

இன்றைய தினம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், 382 இடங்களில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

காலை 6 மணியில் இருந்து, இதுவரைக்கும் 6 ஆயிரத்து 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்றைய தினம் 55 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, முழுக்க முழுக்க வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. காவிரியில் புதிய பாலம் விரைவில் வரும். அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். கோணக்கரை சாலையை சீர்படுத்த ஏற்பாடுகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல் சொன்ன தேதியில், கட்டாயமாக நடைபெறும். ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அ.தி.மு.க. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ, அதன்படி தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும்.

தேர்தலை, ஒரே கட்டமாக நடத்தி விடுவோம். நகர்ப்புறத் தேர்தல் வேலையும் ஆரம்பித்துள்ளது. அதையும் நடத்தி விடுவோம். 6 இடங்கள் மாநகராட்சியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

தி.மு.க.வைப் பொறுத்தமட்டில், கூட்டணியில் எப்போதும் விரிசல் ஏற்படாது. நடைபெறுகிற தேர்தலிலும் இந்த கூட்டணி வெற்றிபெறும்' என்றார்.

Share this story