55,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் : முதல்வர் ஸ்டாலின் உரை

By 
sa22

நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தினவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடந்தது. கோட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். 

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்னொரு முன்னெடுப்பை இந்த விடுதலை நாளில் அறிவிக்கிறேன். தாய்நாட்டிற்காகத் தங்களுடைய இளம் வயதை நாட்டின் எல்லையில் ராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்று திரும்பும் முன்னாள் ராணுவத்தினர் பயன்பெறும் வகையில், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் நபர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கி, திறனை மேம்படுத்தவும், அவர்கள் உரிய பணியில் அமரும் வரையில் தக்க உதவி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும் இன்று நாம் அடிக்கடி காணக்கூடிய காட்சி ஒன்று உள்ளது. ஓலா, ஊபர், ஸ்விகி, சொமட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதைக் காணலாம். நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் வாழ்க்கை முக்கியமானது. அவர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்பதையும் இன்று அறிவிக்கிறேன்.

ஆட்டோ ஓட்டுநர்களாகப் பணிபுரியும் பெண்கள் புதிதாக ஆட்டோ வாங்குவதற்கென ரூ.1 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 141 பேர் பயனடைந்துள்ள நிலையில், தற்பொழுது மேலும் 500 மகளிர் பயன் பெறும் வகையில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களாகப் பணிபுரியும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

அதுமட்டுமல்ல, சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா ரூ.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பதையும் மிகுந்த மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். திட்டங்கள் இல்லாத நாளே இல்லை என சொல்லக்கூடிய வகையில், அரசு அறிவிக்கும் திட்டங்களை கடைக்கோடி மக்களிடமும் கொண்டு போய் சேர்க்கின்ற பெரும் பொறுப்பை ஏற்றிருப்பவர்கள் அரசு ஊழியர்கள். ஆட்சி சக்கரம் சுழல்வதற்கு அவர்களே காரணமாக இருக்கிறார்கள்.

அந்த சக்கரம் வேகமாக சுழல்வதும், மெதுவாக சுழல்வதும் அரசு ஊழியர்களின் கைகளில் தான் உள்ளது. அந்தக் கைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் வேகம் அதிகமாகும் என்பதை எப்போதும் உணர்ந்திருப்பது திராவிட மாடல் அரசு. எனவே, நடப்பாண்டுகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த விழாவில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அனைவருக்குமான அரசு என்பதன் அடையாளமாக இதுபோன்ற திட்டங்களைச் சிந்தித்து சிந்தித்து செயல்படுத்தி வருகிறோம். எட்டுக் கோடி மக்களும் ஏதாவது ஒரு விதத்தில் பயனடையும் ஆட்சியை நமது அரசு வழங்கி வருகிறது. கூட்டாட்சி இந்தியாவில் இணைந்திருக்கும் மாநிலங்கள் சுயாட்சி உரிமை கொண்டதாகச் செயல்பட வேண்டும் என்று பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்கள். மக்களுக்கு நேரடித் தொடர்பு கொண்ட அனைத்தும் மாநிலப் பட்டியலில் இணைக்கப்பட வேண்டும்.

குறிப்பாக கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அதைச் செய்தால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வுமுறை முற்றிலுமாக அகற்றப்பட முடியும். கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி, திறன்மிகு மனித ஆற்றல் ஆகிய அனைத்து வகையிலும் தமிழ்நாடு சிறப்பான பங்களிப்பை இந்திய நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் வழங்கி வருகிறது.

எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசின் சமூகநீதி நிர்வாக ஆட்சிமுறை இந்தியா முழுமைக்குப் பரவுமானால், அதைவிட மகிழ்ச்சியான செய்தி எதுவும் இருக்க முடியாது. மாநிலங்கள் ஒன்றிணைந்த நம் இந்திய நாடு பல்வேறு இனம்-மொழி-மதம்-பண்பாடு கொண்ட மக்கள் அனைவரது வளர்ச்சியையும் கொண்டதாக வளர வேண்டும்.

சமூகநீதி-சமத்துவம்-சகோதரத்துவம்-சமதர்மம்-மதச்சார்பின்மை-ஒடுக்கப்பட்டோர் நலன் ஆகிய மிக உயர்ந்த கோட்பாடுகள் கொண்ட இந்தியாவை அமைப்பது தான் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாகிகளுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். ஒற்றுமையால் கிடைத்த விடுதலை அதே ஒற்றுமையால் காப்போம். வேற்றுமையை விதைக்கும் சக்திகளை வேரோடு சாய்ப்போம். நாம் இந்தியர்கள் என்ற பெருமையுடன் நம் இந்தியாவை நேசிக்கும் அனைவருக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துக்கள்.

விழாவில் தகைசால் தமிழர் விருது, டாக்டர் அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, சிறந்த சேவை புரிந்தோருக்கு பல்வேறு விருதுகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். 

Share this story