குஜராத்தில் 7-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது : முழு விவரம்..

By 
gujarats

குஜராத்தில், பா.ஜனதா கட்சி இந்த தடவை 151 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருந்தது. 9.30 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருந்த நிலையில் 155 இடங்களுக்கு மேல் பா.ஜனதா எட்டிப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா கட்சி 99 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களை கைப்பற்றி நெருக்கத்தில் வந்து சவாலை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் பா.ஜனதா பக்கம் சாய்ந்ததால் குஜராத் சட்டசபையில் காங்கிரஸ் பலம் குறைந்தது.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 77 இடங்களை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வந்தனர். ஆனால் கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 50 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய போது அந்த அளவுக்கு தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்று இருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல பல தொகுதிகளில் காங்கிரஸ் பின் தங்கியது.

காலை 9.30 மணி அளவில் வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று இருந்தது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 55 தொகுதிகளை இழந்து காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. டெல்லி மாடல் ஆட்சியை முன்னிட்டு பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி குஜராத்திலும் வெற்றி பெறுவோம் என்று சவால் விட்டு இருந்தது.

ஆனால் குஜராத் வாக்காளர்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது இன்று ஓட்டு எண்ணிக்கையில் தெரிய வந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு 9 தொகுதிகள் மட்டுமே முன்னிலை கிடைத்தது.

காங்கிரஸ், ஆம் ஆத்மி இரு கட்சிகளும் பெரிய அளவில் வாக்குகளை பெறாததால் பா.ஜனதா கட்சி கடந்த தேர்தலை விட இந்த தடவை அதிக வெற்றியை ருசித்து இருக்கிறது. பா.ஜனதா கட்சிக்கு 155-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று முன்னிலை நிலவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் குஜராத் அரசியலில் பா.ஜனதா கட்சி 7-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி அதிரடியை நிகழ்த்தி உள்ளதோடு குஜராத் அரசியல் களத்தில் புதிய சாதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு குஜராத் தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அதில் பா.ஜனதா வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this story