ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகளால் குழப்பம்; அண்ணாமலை தவிப்பு..

ஈரோடு இடைத்தேர்தலை மையமாக வைத்து ஓ.பி.எஸ். அணியை அ.தி.மு.க.வுடன் சேர்த்து விட்டு விடலாம் என்கிற பாரதிய ஜனதாவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
இதனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரில் யாரை ஆதரிப்பது என்கிற இக்கட்டான சூழலும் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பின்னால் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் அனைவருமே அணிவகுத்து நிற்கின்றனர்.
அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் தனி அணியை உருவாக்கி வைத்துள்ளார். இருவரின் ஆதரவுமே பாரதிய ஜனதாவுக்கு வேண்டும் என்று அக்கட்சி விரும்புகிறது. இதன் காரணமாகவே யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் பாரதிய ஜனதா நடுநிலை வகித்து கொண்டிருக்கிறது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நாளை நடைபெறுகிறது. அப்போது இரட்டை இலை சின்னம் தொடர்பாக இடைக்கால நிவாரணமோ தீர்ப்போ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு முடிவெடுத்தால் சரியாக இருக்கும் என்பதனாலேயே பாரதிய ஜனதா கட்சியும் காலம் தாழ்த்தி வந்துள்ளது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை நடைபெறும் விசாரணைக்கு பின்னர் இறுதி முடிவு எடுக்கலாம் என்று அக்கட்சி தற்போது திட்டமிட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துவிட்டால் அவரை ஆதரிக்கலாம் என்று பா.ஜனதா கட்சியின் ஒரு பிரிவினர் கூறியுள்ளனர். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் நமக்கு வேண்டும்.
எனவே இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்கிற நிலைப்பாட்டை எடுத்து தேர்தலை புறக்கணிக்கலாம் என்றும் கட்சிக்குள் கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன. இதனால் ஈரோடு இடைத்தேர்தலில் என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இப்படி அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிக்குள் நிலவும் குழப்பங்கள் பிப்ரவரி முதல் வாரத்தில் சரியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் ஓ.பி.எஸ். என்ன செய்ய போகிறார்? பா.ஜனதா யாருக்கும் ஆதரவளிக்கப் போகிறதா? தனித்து போட்டியிடுமா? தேர்தலை புறக்கணிக்குமா? என்பது போன்ற கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.