சர்ச்சை பேச்சு : சுட்டிக்காட்டிய குஷ்பு; மன்னிப்பு கேட்ட கனிமொழி..

By 
kanimozhi

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய சைதை சாதிக் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த நடிகைகள் குஷ்பு சுந்தர், நமீதா, காயத்ரி ரகுராம் , கவுதமி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து நடிகை குஷ்பு வெளியிட்ட டுவீட்டுக்கு, டுவிட்டரிலேயே மன்னிப்பு கேட்டுள்ளார் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட குஷ்பு, "ஆண்கள் பெண்களை தவறாகப்பேசுவது, அவர்கள் வளர்க்கப்பட்ட விதத்தையும், அவர்கள் வளர்ந்த மோசமான சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள்.

இதுபோன்ற ஆண்கள் தங்களை 'கலைஞரை பின்பற்றுபவர்கள்' என்று அழைத்துக் கொள்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிட மாடலா?" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை டேக் செய்து கேள்வி எழுப்பியிருந்தார்.

குஷ்புவின் டுவீட்டுக்கு பதிலளித்துள்ள கனிமொழி, "ஒரு பெண்ணாகவும் மனிதராகவும் இதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இதை யார் செய்திருந்தாலும், சொன்ன இடம் அல்லது அவர்கள் சார்ந்த கட்சி எதுவாக இருந்தாலும் இது எக்காரணத்தைக் கொண்டும் சகித்துக்கொள்ள முடியாதது.

இதற்காக என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க முடிகிறது. ஏனெனில் எனது தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் எனது கட்சியான திமுகவுக்கும் இது ஒருபோதும் ஏற்புடையது இல்லை. ' என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ள நடிகை குஷ்பு,"உங்களுடைய நிலைப்பாட்டுக்கும் ஆதரவுக்கும் நன்றி. ஆனால், நீங்கள் எப்போதும் பெண்களின் மதிப்பு மற்றும் சுயமரியாதைக்காக குரல் கொடுத்தவர்," என்று கூறியுள்ளார்.
 

Share this story