திமுகவும், பாஜகவும் அதிமுகவை பங்கு பிரித்து தின்றுவிடக் கூடும் : மருது அழகுராஜ் எச்சரிக்கை 

By 
marudhu85

'தி.மு.க.வும் பா.ஜ..க.வும் அதிமுக.வை பங்கு பிரித்து தின்றுவிடக் கூடும் என்பதே நிகழ்கால அரசியல்'  என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ், அதிமுக தொண்டர்கள் அனைவருக்கும் உணர்த்தியுள்ள அறிக்கை வருமாறு :

'கொடநாடு என்ற சொல்லை கேட்டாலே, பின்னங்கால் பிடறி பட எடப்பாடி ஓடுவதை இம் முறையும் பார்த்தாச்சு...

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாமை, விலைவாசி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு இப்படியாக எல்லா நிலையிலும் மக்களின் கடும் எதிர்ப்பை சேகரித்து வரும் தி.மு.க.வின் ஒரே நம்பிக்கை எடப்பாடி தான்.

கொடநாடு விவகாரம் மற்றும் அவரது சம்பந்தி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதான பல்லாயிரம் கோடி ஊழல்கள்.. இவற்றோடு, அவரது சகாக்களான தங்கமணி, வேலுமணி விஜய பாஸ்கர்கள் ஆகியோர் மீதான ஊழல் வழக்குகள் ஆகியவற்றை முன் வைத்து, தி.மு.க. நடத்துகிற மிரட்டல் அரசியலில் எடப்பாடி சிக்கியிருப்பதை கண் கூடாகவும்.. கருத்தின் வழியாகவும் உணர முடிகிறது.

மேலும், எடப்பாடியை கட்டுக்குள் வைத்து, தமிழக அரசியலை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நகர்த்தலாம் என்றும்..

ஆனால், பா.ஜ.க. போன்ற ஊழல் எதிர்ப்பு சித்தாந்த கட்சிகள் தமிழ் நாட்டில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்டால், தங்கள் கதி அதோ கதியாகிவிடும் என்பதே விடியல் கம்பெனியின் நடுக்கக் கணக்காகும்.

எனவே தான், எடப்பாடியை பிணைக்கைதி போல் வைத்துக்கொண்டு, தமிழ் நாட்டு அரசியலை நகர்த்த பார்க்கிறது தி.மு.க.

அதற்காகத் தான், தங்கள் பிரதான எதிரி எடப்பாடி என்பது போன்ற அரசியல் மாயையையும் திமுக. வே சித்தரித்து, தனக்கான பலவீன போட்டியாளராக எடப்பாடியையே வைத்திருக்கவும் அது திட்டமிடுகிறது.

இதனை உணர்ந்து கொண்டு, திறம்பட்ட அரசியல் அனுபவம் கொண்ட ஓ.பி.எஸ்ஸை தலைமைப்படுத்தி அ.தி.மு.க. தன் எதிர்காலத்தை  முன்னெடுக்க வேண்டும் . அதுவே, அக்கட்சியின் எதிர்காலத்திற்கு நல்லதாகும்.

இல்லையேல், தி.மு.க.வும் பா.ஜ..க.வும் அதிமுக.வை பங்கு பிரித்து தின்றுவிடக் கூடும் என்பதே நிகழ்கால அரசியல் தட்ப வெப்பமாகும்.

இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
 

Share this story