'இப்போதே தயாராகுங்கள்' : அமைச்சரான பிறகு, முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் பேச்சு

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு முதல் முறையாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளார். மேலும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடி மாநகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் ஆவடியில் நடந்தது.
இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மற்றும் 100 பெண்களுக்கு தையல் எந்திரம், 20 கிரிக்கெட் அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள், 30 கால்பந்து வீரர்களுக்கு உபகரணங்கள் மற்றும் 41 சிலம்ப வீரர்களுக்கு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பொதுக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
'எத்தனையோ பதவிகள் அல்ல பொறுப்புகள் வரலாம் போகலாம். ஆனால் தங்களின் செல்லப்பிள்ளையாக தான் நான் இருப்பேன். தற்போது அமைச்சராக இருப்பதால் இருக்கும் பணிகளை சரியாக செய்ய வேண்டிய கடமை உள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போது நாம் பிரசாரத்தை தொடங்க வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள். ஆவடியில் விளையாட்டு மைதானம் வேண்டும் என்று அமைச்சர் நாசர் கோரிக்கை விடுத்தார். அதை நிச்சயம் நிறைவேற்றி தருவேன். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விளையாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர் அணி உறுப்பினர்கள் அமைச்சர் நாசரை பின்பற்றி கட்சியில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். தன்னுடைய பெயரில் ஊரை சேர்த்துக்கொள்ள அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்காது. அந்த வகையில் ஆவடியை தனது பெயருக்கு முன்னாள் வைத்துக்கொள்ள கூடிய தகுதி அமைச்சர் நாசருக்கு உண்டு.
பேராசிரியர் அன்பழகன் திராவிடத்தின் கருவூலம். என்னுடைய திருமணமும் பேராசிரியர் தலைமையில் தான் நடைபெற்றது. இனமான பேராசிரியரின் கீழ் படித்தவர்கள் லட்சக்கணக்கானவர்கள். தற்போது திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் தலைவர் ஸ்டாலினும் அவரிடம் படித்தவர் தான். கலைஞருக்கு பின் ஸ்டாலின் தான் கழகத்தை வழிநடத்த போகிறார் என கலைஞர் இருக்கும் போதே கூறியவர் பேராசிரியர்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் பேராசிரியரின் உருவ சிலை அமைத்து பெயரை சூட்டியது தமிழக அரசு. நம்பர் 1 முதலமைச்சர் என பெயர் வாங்குவது பெரிது அல்ல. நம்பர் 1 தமிழ்நாடு என பெயர் வாங்க வேண்டும் என்பது தான் ஆசை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தற்போது நம்பர் 1 இடத்தை தமிழ்நாடு பிடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.