காஷ்மீரில், ராகுல் பாதயாத்திரை திடீர் ரத்து : காங். குற்றச்சாட்டு 

kashmir4

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாத யாத்திரை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீரில் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

குடியரசு தினத்தையொட்டி நேற்று யாத்திரை நிறுத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் யாத்திரையை தொடங்கினார். பனிஹாலில் யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, பனிஹால் சுரங்கத்தை கடந்தபோது, மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி ராகுல் காந்தியை பாதுகாப்பு வாகனத்திற்குள் அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கூறி இன்றைய யாத்திரையை காங்கிரஸ் கட்சி ரத்து செய்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று 20 கிலோ மீட்டர் தூரம் நடக்க திட்டமிட்டிருந்த ராகுல் காந்தி, பனிஹாலில் சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்ற பிறகு யாத்திரையை நிறுத்த வேண்டியிருந்தது.

ராகுல் காந்தி காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு சென்றபோது, திடீரென பாதுகாப்பு விலக்கப்பட்டதால், அங்கு காத்திருந்த ஏராளமானோர் பாதுகாப்புப் பகுதியை மீறிச் சென்றதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

பாதுகாப்பு படை வீரர்கள் திடீரென திரும்ப பெறப்பட்டது கடுமையான பாதுகாப்பு மீறலை ஏற்படுத்தியது என்றும், ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

Share this story