அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை : வழக்கின் முழு விவரம்

epsops

அ.தி.மு.க.வில் எழுந்த ஒற்றைத் தலைமை பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பலத்தை காட்ட களம் இறங்கினார்கள். இதில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியது.

கடந்த ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப் பட்டார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்கள்.

அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தை எதிா்த்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீா்செல்வம், பொதுக்குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் செல்லாது என்று தீா்ப்பளித்தாா்.

தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனி சாமி சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை ரத்து செய்து டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், அதேபோல ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான அம்மன்.பி.வைரமுத்து சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் விசாரணையின்போது, கட்சிக்கு தேவையான எல்லாவற்றையும் செய்ய தயாராக இருந்தேன். ஆனால் என்னை வெளியே தள்ளிவிட்டு பொதுக்குழுவை கூட்டி னார்கள். இந்த பொதுக்குழு கட்சியின் விதிகளுக்கு முரணானது என்று வாதிட்டனர்.

ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு வில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 4 மாதத்துக்குள் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது போன்று தேர்தலை நடத்தினால் எங்கள் தரப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பொதுக்குழு கூட்டப்படுவதற்கு 15 நாட்க ளுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அந்த விதிமுறையும் மீறப்பட்டுள் ளது. கட்சியின் எந்த பதவிக்கும் ஒருங்கி ணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரே நியமிக்க முடியும் என்றனர். இதையடுத்து வாதிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கீல்கள், "பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கூடாது என்றும் அதுபோன்று செய்தால் 1.50 கோடி தொண்டர்கள் பாதிக்கப்படுவார்கள்" என்றும் வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 'எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் போது பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த அவசரப் படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். அதைத் தொடர்ந்து நீதிபதிகள், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் ஓ.பன்னீர் செல்வத்தின் மேல்முறை யீட்டு வழக்கில் பதில் அளிக் கும் படியும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவை ஏற்று பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தமாட்டோம் என்று இ.பி.எஸ். தரப்பு உத்தரவாதம் அளித்தது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகிற நவம்பர் மாதம் 21-ந் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர். அன்றைய தினம் இந்த வழக்கில் விரிவான விசாரணை நடைபெறும்.
 

Share this story