ஓபிஎஸ் விடுத்த அன்புக்கட்டளைக்கு, மருது அழகுராஜ் மறுபிரவேசம்..

By 
marudhu22

நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகுவதாக அறிவித்திருந்தார். இறுதியில், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த மருது அழகுராஜ், அரசியலிலிருந்தே விலகுவதாக அறிவித்துவிட்டார்.

இதுகுறித்து ஒரு பதிவும் வெளியிட்டிருந்தார். அதில், 'எழுத்து, பேச்சு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் என்னை விடுவித்துக் கொள்கிறேன். இதுகாலம் வரை முதுகு தட்டிக் கொடுத்தவர்களுக்கு நன்றி. என் கருத்துகளால் யாரேனும் காயப்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்' என்று தெரிவித்திருந்தார். 

மருது அழகுராஜின் இந்த திடீர் பதவி விலகல் ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை தந்தது. கழகத்தில் இருந்து இவர் விலகுவதை ஓபிஎஸ் சுத்தமாக விரும்பவேயில்லையாம்.. அதனால், கட்சியில் இருந்து விலகும் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று நிறைய அட்வைஸ்களை செய்துள்ளார் ஓபிஎஸ். 

இதனையடுத்து, விலகல் முடிவை திரும்பப் பெற்றுக்கொண்டு மறுபடியும் அதிமுக அரசியலை முன்னெடுக்கவிருக்கிறார் மருது அழகுராஜ்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள கவிதைச்செய்தி வருமாறு :

அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று அறிவித்த என்னை அழைத்தார் அண்ணன்..

விலகலுக்கான விவரம் கேட்டார்..

தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சல், உடல் சோர்வு, குடும்பத்தாரின் வேதனைகள் இவற்றை கருத்தில்கொண்ட முடிவு என்றேன்..

உங்கள் எழுத்தும் பேச்சும் தொடர வேண்டும். சகோதரன் நான் இருக்கிறேன்..

வேதனைகள் கழுத்தை நெறிப்பது, வெற்றியை நாம் நெருங்குவதை கூறுகிற சகுனம் என்றார்..

விலகுதல் என்கிற பேச்சே இனி இருக்கக்கூடாது.

அயற்சியை அப்புறப்படுத்திவிட்டு, முயற்சியை முன் எடுங்கள்

அம்மா ஆசி உங்களுக்கு உண்டு.

என் அன்புக்கட்டளை இது என்றார்,.

நாளைக்கு காளையார் கோவிலுக்கு அவசியம் வாங்க..

மருதிருவரை வழிபட்டு மருதுவின் மறுபிரவேசம் தொடங்கட்டும் என்றார்..

கசியும் கண்ணீரோடு ஆமோதித்தேன்.

எடப்பாடி ஏற்படுத்திய பிளவு; ஓ.பி.எஸ் என்னும் மகத்தான மனிதரின் உன்னதத்தை உணர வைத்தது..

உயிருள்ள காலம்வரை கழகத்திற்கு உழைக்க வேண்டும் என்னும் உறுதியை குருதியில் தீர்க்கமாய் உறைய வைத்தது..

குறிப்பாக, என்னை விடாமல் துரத்தி விலகல் முடிவை திரும்பப் பெறவேண்டும் என உரிமை வேண்டு கோள்களால் என்னை உருக வைத்த நட்புக்கும் உறவுக்கும் நன்றி.. நாளை முதல் களத்தில்...

இவ்வாறு கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

*

Share this story