வ.உ.சி.யை பின்பற்றி, குரல் கொடுத்து வருகிறார் பிரதமர் மோடி : மத்திய அமைச்சர் பேச்சு

By 
vavusi

விடுதலையின் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக நாமக்கல்லில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழகத்தின் அறியப்படாத இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: 

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற தாரக மந்திரத்தோடு அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வல்லரசு நாடாக உயர்த்த அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும்.

2047-இல் நூற்றாண்டு சுதந்திர ஆண்டைக் கொண்டாடும்போது, இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். வரவிருக்கும் 25 ஆண்டுகள் நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய ஆண்டுகளாகக் கருதப்படுகிறது.

தற்சார்பு இந்தியாவிற்காக முதலில் குரல் கொடுத்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சொந்தக் கப்பலை நிறுவியவர் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனார். அவரது பாதையைப் பின்பற்றி பிரதமர் நரேந்திர மோடி தற்சார்பு இந்தியாவிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் அண்மையில் கப்பற்படை பணியில் சேர்க்கப்பட்டதும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப் பூசிகளும் தற்சார்பு இந்தியா முன் முயற்சிக்கு மேலும் வலு சேர்க்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

Share this story