தூத்துக்குடி சம்பவம்; எடப்பாடி அதிமுகவை விட்டு ஒதுங்கி விடுவதே நல்லது : ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தல் 

13death

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 13 பேர் பரிதாபமாய் பலியாகினர். அன்றைய அரசியல் நிகழ்வுகள் யாவரும் அறிந்ததே. 

இந்நிலையில், இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தை, தொலைக்காட்சியில் பார்த்தே தெரிந்து கொண்டேன் என்று அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சொன்னது பச்சைப் பொய் என்பது அவர் அமைத்த அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையில் மூலம் வந்துவிட்டது. 

தூத்துக்குடியில் நடைபெற்ற கலவரத்தின் ஒவ்வொரு வினாடி விபரங்களும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, அன்றைய தலைமைச் செயலாளர் மூலம் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டது என்னும் உண்மை அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கை மூலம் வெளிப்பட்டிருக்கிறது. 

இது இப்படியென்றால்,  முதலமைச்சர் ஸ்டாலினை கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அரைமணி நேரம் சந்தித்து பேசினார் என்று எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர்களிடம் சொல்ல, 

"அப்பாடி நான் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தேன் என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்து விட்டால், நானும் என்னைச் சார்ந்தவர்களும் அரசியலை விட்டுப் போய் விடுகிறோம். 

இதனை எடப்பாடி பழனிசாமி நிரூபிக்காவிட்டால், அவர் மட்டும் அரசியலில் இருந்து விலகினால் போதும் என பதறாத பண்பாளர் ஓபிஎஸ் சவால் விட்டு, இன்றுவரை அதற்கு பதில் சொல்லாமல் எடப்பாடி பழனிசாமி ஊமையாகி போனது ஏன்? இதற்கெல்லாம் மேலாக, சசிகலா காலடியில் தவழ்ந்து புரண்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியை பெற்று விட்டு, என்னை தேர்வு செய்தது சட்டமன்ற உறுப்பினர்கள் தான் என்று உலகமே காரி துப்புகிற ஒரு பொய்யை கடுகளவும் கூச்சம் இல்லாமல் சொன்னதும் எடப்பாடி பழனிச்சாமி தான்.

ஆக, பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்துக் கொண்டு பொழுதெல்லாம் அந்த பொய்யையே மொய் எழுதி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. 

இந்த தேசத்திற்கு இன்னுயிர் தந்த பூலித்தேவன் தொடங்கி, மருதிருவர், பசும்பொன் தேவர் உள்ளிட்ட தியாகத் தலைவர்களுடைய குரு பூஜைகளுக்கும் வரவில்லை. 

கழகத்திற்கு இரட்டை இலைச் சின்னத்தை தேர்ந்தெடுத்துத் தந்து, அதன் மூலம் அதிமுகவுக்கும் முதல் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த புரட்சித் தலைவரது முதல் வேட்பாளரான திண்டுக்கல் மாயத்தேவரின் மரணத்திற்கும் வரவில்லை.

இது மட்டுமல்லாமல், தன் கட்சி தொண்டர்களை சந்திப்பதற்கே சந்திப்பதற்கே, கூடுதல் காவல் துறை பாதுகாப்பு வேண்டுமென கோரிக்கை வைக்கும் அளவுக்கு, பொதுமக்களிடமும் கழகத் தொண்டர்களிடமும் பலத்த எதிர்ப்பையும் வெறுப்பையும் எடப்பாடி பழனிச்சாமி சம்பாதித்து விட்ட நிலையில்..

இனி தூத்துக்குடி பக்கமும் அவரால் முகம் காட்டுவது என்பது இயலாத காரியமே. இப்படி பயந்து நடுங்கி பதுங்கு குழி அமைத்துக் கொண்டு, வீதிக்கு வருவதற்கே அச்சப்படுகிற அளவுக்கு பரிதாப நிலைக்கு ஆளாகி விட்ட எடப்பாடி பழனிச்சாமி,

தன் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு ஒன்றரைக் கோடி தொண்டர்கள் கட்டிக் காக்கும் அதிமுகவை விட்டு ஒதுங்கி விடுவதே நல்லது.! 

இவ்வாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

*

Share this story