வன்முறைக் கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம் : தமிழக அரசை வலியுறுத்தி, கமல்ஹாசன்-சீமான் அறிக்கை

By 
ksp

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை சேர்ந்தோரின் வீடுகள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு, தீவைப்புச் சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. ஒரே நாளில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நீதி மய்யம் பா.ஜ.க. ரசிகர்கள் அல்ல. ஆனால் ஜனநாயகத்தின் தொண்டர்கள். எந்தச் சூழ்நிலையிலும் தமிழக மண்ணில் வன்முறைக் கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம்.

அமைதிப் பூங்கா என்று பெயரெடுத்த தமிழகத்தை, வெடிகுண்டு கலவர கலாச்சாரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக் கரம் கொண்டு அடக்கி, சட்டம்-ஒழுங்கையும், அமைதியையும் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்துகிறது. இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆங்காங்கே, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், வாகனம் எரிக்கப்பட்டதாகவும் வருகிற செய்திகள் கடந்தகாலத்தையே நினைவூட்டுகின்றன.

தாங்களே தங்களது வீடுகளில் பெட்ரோல் குண்டை வீசி, தங்களது வாகனத்தை எரித்து அரசியல் லாபம் ஈட்ட முயன்ற பா.ஜ.க.வின் நிர்வாகிகளது முந்தையச் செயல்பாடுகள் யாவும் சமகால சான்றுகளாக இருக்க, அதன் தொடர்ச்சியாக இதுவும் இருக்கலாம் எனும் வாதத்தில் உண்மையில்லாமல் இல்லை.

வருகிற பாராளுமன்றத்தேர்தலை மனதில்கொண்டு பெரும் மதக்கலவரத்தை தமிழகத்தில் ஏற்படுத்தத் திட்டமிட்டு வரும் இந்துத்துவ கும்பலின் சதிச்செயல்களுக்கு இரையாகாது, தமிழக அரசு விழிப்போடு செயல்பட்டு சமூக அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டியது அரசின் தார்மீகப் பொறுப்பும், கடமையுமாகும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Share this story