ஓ.பி.எஸ் கருத்தை வரவேற்கிறேன் : டி.டி.வி. தினகரன் பேச்சு
 

ttv4

தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.வில் சசிகலா, நான், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து இணக்கமாக செயல்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் கருத்து கூறி வருகின்றனர். இதனை நான் வரவேற்கிறேன்.

ஆனால் அ.தி.மு.க.வில் சிலர் துரோகத்தை சுவாசமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். அந்த துரோகிகள் திருந்தினால் தான் எண்ணங்கள் நிறைவேறும். எனக்கு எடப்பாடி பழனிச்சாமி மீது தனிப்பட்ட விதத்தில் எந்த வெறுப்பும் கிடையாது. அனைவரும் ஒன்றிணைந்து தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும்.

பொதுமக்கள் தி.மு.க. மீது நம்பிக்கை வைத்து ஆட்சியில் அமர வைத்தனர். ஆனால் தி.மு.க. மக்களின் எண்ணங்களை நிறைவேற்றவில்லை. இதற்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் அனுபவிப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலானது இந்திய பிரதமரை தேர்ந்தெடுக்கும் ஒரு தேர்தலாகும். அதனால் 2023-ம் ஆண்டு இறுதியில் யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்வோம்.

சமூக சேவை குறித்த இலவச திட்டங்கள் வரவேற்கிறேன். ஆனால் அதே நேரத்தில் தேர்தலை மனதில் வைத்து கொண்டு மக்களை ஏமாற்றும் இலவச திட்டங்கள் ஒருபோதும் கூடாது. அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் செல்லாது என நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பு அளித்தார். அவர் அ.தி.மு.க.வின் சட்ட விதிகளின்படி அளித்த தீர்ப்பை பாராட்டுகிறேன்.

தற்போது எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்த வழக்கு குறித்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் வர உள்ளது. அந்த தீர்ப்பும் எம்.ஜி.ஆர். வகுத்த சட்ட விதிகளின்படி அமையும் என எனது அனுபவத்தில் கூறுகிறேன். அ.தி.மு.க ஒன்றிணை ந்தால் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்று கேட்டால் என்னை பொறுத்தவரை அத்தைக்கு மீசை முளைக்கட்டும் அதன் பிறகு பார்ப்போம் என கூறுவேன்.

எடப்பாடி பழனிச்சாமி நிறைய துரோகம் செய்துவிட்டார். அதுபற்றி விரைவில் வெளியிடுவேன் என வைத்திலிங்கம் கூறியுள்ளார். அதுபற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும்.

டெண்டர் முறைகேடு வழக்கில் செய்நன்றி, நம்பிக்கை துரோகம் அருவருக்கத்தக்க ஒரு குணாதிசயம். எந்த தவறு செய்தாலும் மன்னித்து விடலாம். செய் நன்றி மறந்தவர்க ளுக்கு இறைவன் தடுத்தாலும் அவர்களுக்கு தண்டனை உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

Share this story