மக்கள் மறுவாழ்வுக்காக நிதி திரட்டுகிறார் நடிகர் சத்யராஜ் மகள்..

By 
div1

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் வன்முறைகளால் பாதிக்கப்படும் மக்கள் மறுவாழ்வு பணிகளில் ஈடுபடுவதில் ஆர்வமுடையவர். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டார். இப்போது மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மறுவாழ்வு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

மணிப்பூர் தற்போது நெருக்கடியை எதிர்கொள்கிறது. எண்ணற்ற குடும்பங்கள் இடம்பெயர்ந்து, சமூகங்கள் சிதைந்துள்ளன. மணிப்பூரில் இடம் பெயர்ந்தவர்களுக்கு நேரடி ஆதரவை வழங்குவதற்கான நம்பகமான வழியைக் கண்டறிய நானும் எனது தோழி காவ்யா சத்தியமூர்த்தியும் விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டோம்.

மணிப்பூரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான யா-ஆலின் நிறுவனம் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. இதன் நிறுவனர் மனித உரிமைப் பாதுகாவலரான சதாம், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காக வாதிட்டு, மாற்றத்தின் முன்னணியில் இருந்து வருகிறார். அவருடன் இணைந்து தற்போது மணிப்பூரின் இடம் பெயர்ந்த மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க நிதி திரட்டும் பிரசாரத்தை தொடங்கி உள்ளோம்.

இந்த பிரசாரம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உணவு, தங்குமிடம், உடை மற்றும் மிகவும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. நான் இந்த மாதம் இவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பங்களித்துள்ளேன். வரும் மாதங்களில் மேலும் வழங்க உள்ளேன்.

மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த அனைவரும் கைகோர்க்கு மாறு கேட்டுக்கொள்கிறேன். இந்திய நன்கொடையாளர்களுக்கு வரி விலக்குகள் கிடைக்கும். இந்த முக்கியமான முயற்சிக்கு ஆதரவளிக்க அனைத்து தரப்பினரையும் வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 


 

Share this story