அதிமுகவில் இணைந்தார் நடிகை கவுதமி..

By 
gavu

பாஜகவில் செயல்பட்டு வந்த நடிகை கவுதமி, கடந்த ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகினார். கனத்த இதயத்துடன் பாஜகவிலிருந்து விலகுவதாக தெரிவித்த அவர், அழகப்பன் என்பவர் தன்னிடம் இருந்து சொத்து, பணம், உள்ளிட்டவற்றை மோசடி செய்ததாகவும், அவருக்கு பாஜவின் மூத்த நிர்வாகிகள் சிலர் துணையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கு பாஜக மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நடிகை கவுதமி அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் கவுதமி இணைந்துள்ளார். அப்போது பேரறிஞர் அண்ணாவில் மாபெரும் தமிழ் கனவு புத்தகத்தை எடப்பாடி பழனிசாமிக்கு கவுதமி பரிசளித்தார்.

முன்னதாக, பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நிலையில், தற்போது நடிகை கவுதமியும் அதிமுகவில் இணைந்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க முனைப்பு காட்டி வரும் பாஜக, ஏற்கனவே உள்ள கூட்டணியை வலுப்படுத்தவும், புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கவும் முயற்சித்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக, பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டுள்ளது.

அதேசமயம், அனுபவமிக்க மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேர் பாஜகவில் கடந்த வாரம் இணைந்தனர். 

குறிப்பாக, அதிமுகவை சேர்ந்த பலர் அதில் இருந்தனர். இந்த பின்னணியில், பாஜகவில் இருந்து விலகிய மக்கள் அறிமுகம் பெற்ற நடிகைகள் காயத்ரி ரகுராம், கவுதமி ஆகிய இரண்டு பேரை அதிமுக தன் வசம் இழுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story