ரத்தக்கண்ணீர் வடிக்கும் அதிமுக தொண்டர்கள்.! - எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த கே.சி. பழனிச்சாமி

By 
kcp

நடைபெற்ற மக்களவை தேர்தலில், தமிழகத்தில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது. இதுபற்றி கூறியுள்ள முன்னாள் எம்.பி கே.சி பழனிச்சாமி, 

“நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், நிழலும் கொள்கைப் போராளிகளுக்கு சமமே! வீழ்த்த முடியாத மக்கள் பேரியக்கம் அதிமுக" என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அதற்கு பதிலடி கொடுத்த முன்னாள் எம்.பி கே.சி பழனிச்சாமி, 

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் தோல்வி காணாத இயக்கம் அதிமுக. அம்மா காலத்தில் இரண்டு முறை சட்டமன்றத்திலும் ஒரு முறை நாடாளுமன்றத்தில் மட்டுமே தோல்வியை சந்தித்தார். மற்ற எல்லா தேர்தல்களிலும் வெறும் வெற்றியை மட்டுமே பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக ஆளுகிற கட்சியாக முதலமைச்சர் பொறுப்போடு ஒப்படைக்கப்பட்டது. தோல்வியே  காணாத இயக்கம் இன்று EPS-ஆல் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து விட்டு வீழ்த்த முடியாத பேரியக்கம் என்று சித்தாந்தத்தை விதைக்க வேண்டாம் இதை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

கொள்கைக்காக வாழ்வோம்; எது வந்தாலும் ஏற்போம் என்று இபிஎஸ் கூறியுள்ளார். அதிமுக என்பது திராவிட சித்தாந்தத்தில் ஊறிய இயக்கம் அந்த திராவிட கொள்கைகளில் EPS பயணிக்கவில்லை. பாஜகவிற்கு அடிபணிந்தார். இந்த தேர்தலிலும் கூட அண்ணாமலையை எதிர்த்தாரே தவிர மதவாத அரசியலையும், பாஜகவையும் எதிர்க்கவில்லை.

அதனால் தான் பாஜக எதிர்ப்பு வாக்குகள் முழுமையாக திமுகவிற்கு சென்றது. திமுகவை தீய சக்தி என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் அம்மாவும் எதிர்த்தார்கள். அதிலும் இந்த மூன்று ஆண்டுகள் திறன் பட செயல்படவில்லை. அதனால் திமுக எதிர்ப்பு வாக்குகள் பாஜகவிற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் ஒரு பகுதி சென்றது. எது வந்தாலும் நீங்கள் ஏற்கலாம் ஆனால் அதிமுக தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். 

அதிமுகவிற்கு எதிராக நடைபெற்ற சூழ்ச்சிகளையும், சூதுகளையும்  முறியடிக்கவே தனித்து கூட்டணி என்று EPS கூறியுள்ளார். 2014-லும், 2016-லும் தனித்து நின்று வென்ற இயக்கம் அதிமுக. அதனால் தனித்து போட்டி என்பது சாதனை அல்ல. தனித்து நின்று வெல்வதே சாதனை.

இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாடமும், படிப்பினையும் நமக்கு கிடைத்திருக்கிறது என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு,  2019, 2021 உட்பட 8 தேர்தல்கள் உங்களுக்கு பாடமும் படிப்பினையையும் தரவில்லையா? 

உங்களை நம்பி மீண்டும் எப்படி 2026 தேர்தலை உங்கள் தலைமையில் சந்திப்பது? தொடர்ந்து 9 தேர்தல்களில் தோல்வி தந்துவிட்டு இன்னும் எத்தனை தேர்தல்களில் பாடம் படித்துக் கொண்டிருப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொண்டர்களின் உழைப்புக்கும் தியாகத்திற்கும் என்ன கைமாறு  செய்யப் போகிறேன் இன்று கண்கலங்குகிறேன் என்று  எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த கே.சி பழனிச்சாமி, உங்களைத் தலைவராக கொண்டதற்காக தொண்டர்களும் அதிமுக வாக்காளர்களும் தான் கதி கலங்கி கண்கலங்கி நிற்கிறார்கள். நீங்கள் கண்ணீர் விடுவது இன்னும் நம்மை தலைவராக வைத்திருக்கிறார்களே என்ற ஆனந்த கண்ணீர், ஆனால் தொண்டர்கள் விடுவது இவர் தலைமையில் இனி வெல்லவே முடியாது என்கிற ரத்தக்கண்ணீர் என்று பதில் அளித்துள்ளார். 

தேர்தலின்போது அல்லும் பகலும் அயராது உழைத்த கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்களின் திருப்பாதம் பணிகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அதற்கு கருத்து தெரிவித்த கே.சி பழனிச்சாமி, அனைவரின் பயமும் அதுதான் இப்படி பாதம் பணிந்து எத்தனை பேரின் காலைவாரியுளீர்கள்.

9 முறை தொண்டர்களின் காலையும் வாரிவிட்டீர்கள். 'தென் சேன்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துளீர்கள். 9 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கும், 3 தொகுதிகளில் நான்காவது இடத்திற்கும் அதிமுக தள்ளப்பட்டுள்ளது. 

இந்த வாக்குகளை சட்டமன்றம் வாரியாக கணக்கெடுத்தோம் என்றால் 10 சட்டமன்ற தொகுதிகளில் கூட அதிமுக வெற்றிபெறவில்லை. அதிமுக இன்னும் 10%-15% இழந்த வாக்குகளை திரும்ப பெறவேண்டும். அதற்கு முக்கிய காரணம் உட்கட்சி பிரச்சனை தான். EPS மக்கள் மன்றத்திலோ தொண்டர் பலத்தாலோ  பொதுச்செயலாளர் ஆகவில்லை. நீதிமன்ற தீர்ப்புகள் மூலமாகவும், பொதுக்குழு & செயற்குழு உறுப்பினர்கள் மூலமாகவும் முன்னாள் அமைச்சர்களை வைத்துக்கொண்டு பொதுச்செயலாளர் ஆகியுள்ளார்.

இவர்களை மட்டும்  வைத்துக்கொண்டு கட்சியை வழிநடத்தினால் முடிவுகள் இப்படி தான் இருக்கும். மக்கள் செல்வாக்கு மற்றும் தொண்டர் பலத்தால் வளர்ந்த இயக்கம் அதிமுக இந்த உண்மையும் நிதர்சனத்தையும் உணர்ந்து உடனடியாக அனைத்து நீக்கங்களையும் ரத்து செய்யவேண்டும். கிளை முதல் தலைமை வரை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதிமுகவை எப்படி பலப்படுத்த போகிறீர்கள்? 

வாக்கு சதவீதத்தை எப்படி அதிகரிக்க போகிறீர்கள்? என்கிற இந்த இயக்கம் குறித்த உங்கள் எதிர்கால திட்டத்தை சிலநாட்களுக்குள் வெளியிடவேண்டும். அப்படி இல்லையென்றால் உங்கள் தலைமையை மேலும் சகித்துக்கொள்ள வேண்டுமா என்கிற முடிவுக்கு தொண்டர்கள் வந்துவிடுவார்கள். 

உங்களிடம் இருக்கும் பணபலத்தால் சாதாரண தொண்டன் உங்களை தூக்கி எரியாமல் இருக்கலாம் ஆனால் விட்டு விலகி வெகுதூரம் சென்றுவிடுவான். அது இந்த இயக்கத்திற்கு மேலும் தேய்மானத்தை கொடுக்கும். இந்த இயக்கத்தின் எதிர்காலம் கருதி நல்ல முடிவுக்கு வாருங்கள்.

கட்சியை ஒன்றுபடுத்தி வாக்கு வங்கியை பலப்படுத்துங்கள்” என்று கே.சி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.
 

Share this story