அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் : இன்று முக்கிய முடிவுகள்..

By 
AIADMK District Secretaries Consultative Meeting Key Decisions Today ..

சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. கட்சிகள் முக்கிய அங்கம் வகித்து இருந்தன. உள்ளாட்சி தேர்தலிலும், இந்த கூட்டணியை தொடர்வது தொடர்பாக இன்று நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.
சமீபத்தில் பா.ஜனதா கட்சியால் அ.தி.மு.க. தோல்வியை தழுவியதாக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து வெளியிட்டார். இதற்கு பா.ஜ.க.வில் எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அறிவித்தனர். இதன்மூலம், உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி நீடிக்கும் என்று உறுதியாகி உள்ளது.

ஆலோசனை :

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதாவை சேர்த்ததால்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள் கணிசமான அளவுக்கு கிடைக்கவில்லை என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒரு சாரார்களிடம் அதிருப்தி நிலவுகிறது. இது தொடர்பாகவும், இன்று நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தோற்றம் நிலவுகிறது. இருவரும் தனித்தனியாக அறிக்கை வெளியிடுவதால், இந்த பிரச்சனை பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கும் இன்று நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிகிறது.

உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காகவே மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடப்பதாக அ.தி.மு.க. தலைவர்கள் தெரிவித்தாலும், சசிகலா விவகாரம்தான் மிக முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சசிகலாவின் செயல்பாடுகள் அமைந்திருப்பதாக மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.

சசிகலா விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டால், எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சசிகலாவின் ரகசிய திட்டங்களையும், புதிய வியூகங்களையும் முறியடிக்கும் வகையில், இன்று நடக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் தி.மு.க.வுக்கு சென்ற வண்ணம் உள்ளதால், அதை தடுக்க கட்சி நிர்வாகிகளுக்கு என்ன உத்தரவாதம் அளிக்கலாம் என்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.

முக்கிய முடிவுகள் :

மேலும் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மீது தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்து வருவதால் அதை எதிர்கொள்வது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கிறார்கள்.

உட்கட்சித் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், சசிகலா விவகாரம், கூட்டணி நிலைப்பாடு, தி.மு.க.வால் ஏற்படும் நெருக்கடி உள்பட பல விசயங்களில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் முடிவுகள் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். முடிவுகள் எடுப்பதில் தாமதம் செய்தால், அவை வேறு விதமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் எச்சரித்து உள்ளனர்.

எனவே, இன்று நடக்கும் மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். இதனால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Share this story