தமிழ்நாட்டில் பாஜகவை அடையாளம் காட்டியதே அதிமுகதான்: எடப்பாடி பழனிசாமி

By 
dfg7

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரசாரம் தமிழ்நாட்டில் களை கட்டியுள்ளது. அந்த வகையில், மதுரை பாஜக வேட்பாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், 2024 தேர்தலுக்கு பிறகு, அதிமுக காணாமல் போகும் என விமர்சித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் பாஜகவை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “மதுரை தொகுதியின் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன். அவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக, என்னைப் பற்றியும், அதிமுகவைப் பற்றியும் பேசியிருக்கிறார். 2024, அதாவது இப்போது நடக்கின்ற மக்களவைத் தேர்தலுடன் அதிமுக காணாமல் போகும் என்று பேசியிருக்கிறார். காணாமல் போனால், அவர் கண்டுபிடித்துக் கொடுக்கட்டும். உங்களைப் போல எத்தனைப் பேரை பார்த்த கட்சி அதிமுக. அதிமுகவின் வரலாறு அவருக்குத் தெரியுமா?” என கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் 1998 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை அடையாளம் காட்டியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. எங்களைப் பார்த்தா கட்சி இருக்காது என்று கூறுகிறீர்கள் எனவும் அவர் காட்டம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “1998ஆம் ஆண்டில் நான் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டேன். அப்போதுதான், பாஜகவுடன் கூட்டணி வைத்தோம். பாஜகவின் சின்னம் தாமரை என்று அடையாளம் காட்டியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. உங்களுடைய அடையாளத்தையே அதிமுகதான் காட்டியது. எங்களைப் பார்த்தா கட்சி இருக்காது என்று கூறுகிறீர்கள்.” என தெரிவித்தார்.

Share this story