அதிமுக விவகாரம் : சசிகலா முயற்சியும், எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவும்..

By 
sasi44

அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக கூறி வந்த சசிகலாவால் அதில் வெற்றி பெற முடியாமல் சோர்வடைந்துவிட்டார். சிறை தண்டனை முடிந்து விடுதலையாகி வந்த சசிகலா, முதலில் கட்சி நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி வந்தார். அதன் பிறகு அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட போவதாக கூறினார்.

பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வினரை கண்டிப்பாக ஒன்று சேர்ப்பதாகவும் கூறி வந்தார். தி.மு.க. எனும் தீயசக்தியை ஒழிக்க அ.தி.மு.க. ஒன்றிணைவது அவசியம் என்றும் செய்தியாளர்களிடம் கூறி வந்தார். ஆனால் அவரது பேச்சுக்கு அ.தி.மு.க.வில் யாரும் செவி சாய்க்கவில்லை.

ஓ.பன்னீர்செல்வமும் இன்னும் சசிகலாவை சந்திக்க இயலாமல் உள்ளார். சமீபத்தில் ஒரத்தநாட்டில் வைத்திலிங்கம் இல்ல திருமணம் தஞ்சாவூரில் நடந்தது. அதற்கு சசிகலாவை அழைத்து தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரையும் ஒருங்கிணைக்க திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் அந்த திருமண விழாவுக்கு சசிகலா செல்வதை தவிர்த்து விட்டார்.

அண்மையில் டி.டி.விதினகரனை சந்தித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம் சசிகலாவையும் சந்திக்க இருப்பதாக தெரிவித்தார். ஆனாலும் இன்னும் அவரால் சசிகலாவை சந்திக்க முடியவில்லை. ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்திக்கும் முயற்சிக்கு சசிகலா பிடி கொடுக்காமல் இருக்கிறார்.

அரசியலில் சசிகலாவின் மறுபிரவேசம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியை நோக்கிதான் செல்வதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதுபற்றி எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்டச் செயலாளர் கூறுகையில்,

அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலாவை சேர்த்தால் கட்சியில் பெரும் குழப்பம் ஏற்படும். மீண்டும் கோஷ்டி உருவாகும். அதனால் தான் சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தவிர மற்ற யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

அதற்கேற்ப டி.டி.வி.தினகரன் கட்சியான அ.ம.மு.க.வில் இருந்து பெரும்பான்மையான ஆட்கள் அ.தி.மு.க.வுக்கு வந்துவிட்டனர். ஒரு சிலர்தான் டி.டி.வி.பக்கம் உள்ளனர். அவர்களும் தேர்தல் நெருங்க நெருங்க எங்கள் பக்கம் வந்து விடுவார்கள். இதேபோல் தான் ஓ.பன்னீர்செல்வத்துடன் உள்ளவர்களும் எங்கள் பக்கம் வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
 

Share this story