திமுக ஆட்சி வைத்த கடனுக்கு, அதிமுக ஆட்சி வட்டி கட்டியது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

By 
AIADMK pays interest on DMK rule Former minister Jayakumar

தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து மக்கள் அறியும் வகையில், வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், 

'வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால், அதற்கு நானே பொறுப்பு. 

ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அறிக்கையை ஆய்வு செய்த பின்பு, அறிக்கை தயார் செய்யப்பட்டது. தமிழக அரசு வெளிப்படைத்தன்மை உடன் செயல்படுவதால் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2 மாதங்கள் கொரோனா 2-வது அலை தடுப்பு பணியில் போய் விட்டது. 

மற்ற வெள்ளை அறிக்கைகளை விட கூடுதல் விவரங்கள் இதில், இடம்பெற்றுள்ளன. முந்தைய ஆட்சியில் பெறப்பட்ட கடனால் ஏற்பட்ட சிக்கல்களை விளக்கியுள்ளேன்.

1.50 லட்சம் கோடி வருவாய் இழப்பு :

தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை 3.16 சதவீதமாக  ஆக உள்ளது, தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் சரிந்துள்ளது; 2006-2011 தி.மு.க. ஆட்சியில் அரசின் வருமானம் உபரியாக இருந்தது.

வருமானம் இல்லாத அரசாங்கம், எந்த பிரச்சினையை சந்திக்கும் என்பது அனைவரும் அறிந்ததே; தமிழ்நாடு அரசின் வருமானம் மிகவும் சரிந்து விட்டது. ஒன்றிய அரசின்  வரிப்பங்கீட்டில் தமிழ்நாட்டின் பங்கு முழுமையாக வந்துசேரவில்லை.

தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடமையாக இதை செய்கிறோம். இணையதளத்தில் இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். 

முக்கிய துறைகளில் நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து, இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில், வேறெந்த மாநிலமும் தமிழ்நாடு சந்தித்ததைப் போன்ற பொருளாதார சரிவை சந்திக்கவில்லை. 

தமிழகத்தில், கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட்டின்போது, மொத்த கடன் ரூ.5,70,186 கோடியாக இருந்த‌து. 

தமிழகத்தில், பொது சந்தா கடனில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2,63,976 கடன் சுமை உள்ளது என்று அடுக்கடுக்கான புகார்களை, வெள்ளை அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டிருந்தார்.

மக்களை திசை திருப்புகின்றனர் :

இந்நிலையில், வெள்ளை அறிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்   கூறியதாவது :

'வெள்ளை அறிக்கையில், புதிய விஷயங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதில், திமுக மக்களை திசை திருப்புகிறது. 

கடந்த திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட கடனுக்கு, அதிமுக ஆட்சியில் வட்டி கட்டினோம். 

வெள்ளை அறிக்கை மூலம், மக்களை திசை திருப்புகின்றனர். மக்களை வரிவிதிப்புக்கு தயார்படுத்துவதாக வெள்ளை அறிக்கை உள்ளது' என்றார்.

Share this story