அதிமுக-பாஜக நாடகம் ஆடுகிறார்கள் : அமைச்சர் உதயநிதி பரபரப்பு தகவல்

By 
nidhi4

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஹள்ளியில் தி.மு.க. ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இன்று புதுப்பிரச்சினை, காலையில் ஒருவர் கூட்டணி இல்லை என்கிறார். மாலையில் கூட்டணி என்கிறார். 4 முன்னாள் அமைச்சர்கள் திருட்டுத்தனமாக டெல்லி சென்றுள்ளார்கள்.

அ.தி.மு.க. என்றால் அது அமித்ஷா.தி.மு.க. தான். இவர்கள் இருவரும் நாடகம் ஆடுகிறார்கள். தேர்தலின்போது இணைந்து வருவார்கள். ஒருவர் திருடர் மற்றொருவர் கொள்ளைக்காரர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், கலைஞர் குடும்பம் தான் வாழ்கிறது என்று மோடி பேசுகிறார். ஆமா கலைஞரின் குடும்பம் தான், தி.மு.க. என்கிற குடும்பம் தான் பிழைக்கிறது. ஆனால் உங்களால் அதானி குடும்பம் தான் பிழைத்து வருகிறது.

அதானியும், மோடியும் ஒன்றாக விமானத்தில் சென்றனர். இதுகுறித்து புகைப்படத்துடன் ராகுல் காந்தி விளக்க வேண்டும் என கேட்டார். ஆனால் ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு சென்று வெற்றி பெற்றார். இதுதான் இந்தியா கூட்டணிக்கான வெற்றி.

வருகிற தேர்தலில் அடிமைகளையும், அதன் எஜமானர்களையும் விரட்டி அடிக்க வேண்டும். நம்முடைய கூட்டம் கொள்கை கூட்டம் என்பதை நிரூபிக்க வேண்டும். நமது முதலமைச்சர் செயல்படுத்திய திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

Share this story