சீமான் மீதான குற்றச்சாட்டுகள்; கோர்ட்டில் விஜயலட்சுமி வாக்குமூலம்..
 

By 
lax

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பா ளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு விஜயலட்சுமி அளித்த புகாரில் சீமான் மீது வளசரவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், சீமான் மீது விஜயலட்சுமி கடந்த 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் புகார் அளித்தார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு பேட்டி அளித்த விஜயலட்சுமி, சீமானை கைது செய்யும் வரை ஓயமாட்டேன் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் விஜயலட்சுமியிடம் கோயம்பேடு துணை கமிஷனர் உமையாள் நேற்று 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார். அப்போது விஜயலட்சுமி சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் விஜயலட்சுமியை இன்று திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தியும் வாக்குமூலம் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதன்படி சென்னையில் இருந்து அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது:-

"விஜயலட்சுமி, அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு கற்பழிப்பு, மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்காகும். இது தொடர்பாக விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்திருப்பதை தொடர்ந்து அவரிடம் ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புகார் அளித்திருப்பதால் திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை நடத்துவோம். விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி முடிக்கபட்ட பிறகு சீமானிடம் விசாரணை நடத்துவது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் கோர்ட்டு வழிகாட்டுதலின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும்" என்று போலீசார் தெரிவித்தனர். 
 

Share this story