தி.மு.க.வினர் கருத்துக்கு அமித்ஷா பதிலடி

By 
san2

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரிவர்தன் யாத்திரையில் மத்திய மந்திரி அமித் ஷா கலந்துகொண்டு பேசினார். ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதை ஒட்டி, அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி, மீண்டும் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தின் துங்கர்பூரில் நடைபெற்ற யாத்திரை துவக்க விழாவில் பேசிய மத்திய மந்திரி அமித் ஷா, தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

"தி.முக. தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் மகன் உள்ளிட்டோர் சனாதன தர்மம் அகற்றப்பட வேண்டும் என்று கூறி வருகின்றார்கள். அவர்கள் வாக்கிற்காக சனாதன தர்மம் குறித்து பேசி வருகிறார்கள். அவர்கள் சனாதன தர்மத்தை களங்கப்படுத்தி உள்ளனர்."

"இந்தியா (I.N.D.I.A.) கூட்டணியில் கெட்டவர்கள் இணைந்துள்ளனர். அவர்கள் தேர்தல் வாக்குகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அவர்கள் சனாதன தர்மம் குறித்து எவ்வளவு அதிகமாக பேசினாலும், அவை குறைந்த அளவு தாக்கத்தைக் கூட ஏற்படுத்தாது." "மோடி மீண்டும் வெற்றி பெற்றால் சனாதனம் ஆட்சிக்கு வந்துவிடும் என்று அவர்கள் கூறுகின்றார்கள். சனாதனம் மக்களின் மனங்களில் ஆட்சி செய்கிறது. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தான் மோடி ஆட்சி செய்வார்," என்று அமித் ஷா தெரிவித்து உள்ளார்.

முன்னதாக பேசிய அமைச்சர் உதியநிதி ஸ்டாலின், " சனாதன தர்மம் ஒற்றுமை மற்றும் சமூக நீதிக்கு எதிரானது. சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும்," என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

Share this story