மோடி அரசின் மற்றொரு ஊழல் வெளிவந்துள்ளது: ராகுல் குற்றச்சாட்டு..

By 
rahulji3

தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், நரேந்திர மோடி அரசின் மற்றொரு ஊழல் வெளிவந்துள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரம் திட்டம் ரத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “நரேந்திர மோடி அரசின் மற்றொரு ஊழல் வெளிவந்துள்ளது. 

மோடியின் ஊழல் கொள்கைகளுக்கு மற்றொரு சான்றாக இது உங்கள் முன் உள்ளது. தேர்தல் பத்திரங்களை லஞ்சம் மற்றும் கமிஷன் வாங்கும் ஊடகமாக பாஜக மாற்றியது. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.

தேர்தல் பத்திரம் திட்டத்தை கடந்த 2017-18ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் பாஜக அறிவித்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2018ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அமலுக்கு வந்தது. 

அதன்படி, ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. அவை பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே கிடைக்கும். ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

இந்த தேர்தல் பத்திரங்களை தனி நபர்கள், நிறுவனங்கள் வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும். தேர்தல் பத்திரங்களை வாங்கும் தனி நபர், நிறுவனங்கள் யார் என்ற விவரங்கள் பொதுமக்களுக்கோ அல்லது நன்கொடையை பெறும் அரசியல் கட்சிக்கு அளிக்கப்படாது. 

ஆனால், அரசு மற்றும் வங்கி சார்பில் இந்த விவரங்களை சேகரித்துக் கொள்ளலாம். பொதுவாக ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். எனினும் தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு மாதத்தில் 30 நாட்கள் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
மாநில, தேசிய கட்சிகள் எப்படி அங்கீகரிக்கப்படுகின்றன? என்னென்ன தகுதிகள் வேண்டும்?

இத்தகைய தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி, “தேர்தல் பத்திரம் முறை மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. அரசை கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. 

தேர்தல் பத்திரம் நன்கொடைக்காக கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது சட்டவிரோதம். தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அரசியல் சாசன பிரிவு 19(1) ஆகியவற்றை மீறும் வகையில் தேர்தல் பத்திரம் திட்டம் உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளது. 

கருப்பு பணத்தை தடுக்க தேர்தல் பத்திரங்களை அனுமதிக்கிறோம் என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல. எனவே, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை மார்ச் 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்.” என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this story