பசும்பொன் தேவர் நினைவிடத்தில், முதல்வர் ஸ்டாலின் மரியாதை

At the Golden God Memorial, in honor of Chief Stalin

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பசும்பொன்னில், முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி விழா மற்றும் 59-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் (28-ந்தேதி) தொடங்கியது.

முதல் நாள் ஆன்மீக விழாவாகவும், 2-ம் நாள் அரசியல் விழாவாகவும், இன்று (30-ந்தேதி) குருபூஜை விழாவாகவும் நடத்தப்படுகிறது.

குருபூஜையையொட்டி, பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் திரளானோர் மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மதியம் மதுரை வந்தார்.

பின்னர், கீழடி தொல்லியல் அகழாய்வு பணிகள், மதுரை நகரில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

இரவு அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கிய மு.க.ஸ்டாலின், இன்று காலை 7.15 மணிக்கு குருபூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் புறப்பட்டு சென்றார்.

முதலில் மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பிறகு, முதலமைச்சர் அண்ணாநகர் 80 அடி ரோடு வழியாக சென்றார். அப்போது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மு.க.ஸ்டாலினை வரவேற்று, கோ‌ஷம் எழுப்பினர். இதனைப் பார்த்த அவர் கையசைத்து, மகிழ்ச்சி தெரிவித்தார்.

தொடர்ந்து, தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அவர் பசும்பொன்னிற்கு புறப்பட்டுச் சென்றார். வழி நெடுகிலும் தி.மு.க.வினரும், பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட எல்லையிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவர், காலை 9.30 மணிக்கு பசும்பொன் சென்றார்.

அங்கு நடந்த குருபூஜை விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
*

Share this story