நாடாளுமன்றத்திற்குள் தாக்குதல்: தீவிர விசாரணைக்கு உத்தரவு..

By 
birla

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், மக்களவையில் இன்று பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த போது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இருவர்  அத்துமீறி இருக்கையில் குதித்தனர். தொடர்ந்து, அவையில் மையப்பகுதிக்கு செல்ல முயன்ற அவர்கள், தாங்கள் கையில் மறைத்து வைத்திருந்த புகை உமிழும் கருவியை வெடிக்க செய்தனர். அதில் இருந்து வாயு வெளிப்பட்டது.

இதையடுத்து, எம்.பி.க்கள் உதவியுடன் அவர்களை பிடித்த அவைக் காவலர்கள் அவர்களை போலீசாரிசம் ஒப்படைத்தனர். அதேபோல், நாடாளுமன்றத்தின் வெளியேயும் இரண்டு பேர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 2 ஆண், 2 பெண் என மொத்தம் 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த இருவர் அவைக்குள் அத்துமீறி நுழைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, அவை கூடியதும் நாடாளுமன்றத்திற்குள் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் விரிவான தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா அவையிலேயே அறிவித்தார்.

“மக்களவைக்கு உள்ளே நுழைந்த இருவரும், வெளியே இருவரும் பிடிபட்டுள்ளனர். இது தொடர்பாக விரிவான தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவைக்குள் எழுந்த புகையால் எந்த பாதிப்பும் இல்லை. பாதுகாப்பு மீறல் தொடர்பாக எம்.பி.க்களின் கருத்துகள் தனியாக கூட்டம் நடத்தி பெறப்படும்.” என சபாநாயகர் ஓம் பிர்லா அவையில் தெரிவித்தார்.

Share this story