விவசாயிகள் மீது தாக்குதல் : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

By 
Attack on farmers Chief Minister Stalin's condemnation

மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே, ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

“உத்தரப் பிரதேச மாநிலத்தில், மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. 

ஒரு பத்திரிகையாளர் உட்பட, ஒன்பது பேர் பலியாகி இருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து, வன்முறை அதிகம் நடந்துள்ளது. 

கடந்த 300 நாட்களாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். அதனை மத்திய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான், உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகள் ஆகும்.

இத்தகைய கொந்தளிப்புச் சூழ்நிலையை அறியச் சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் அகிலேஷ், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு, திடீரென விடுவிக்கப்பட்டுள்ளார். 

இந்தக் கொந்தளிப்புக்குக் காரணமானவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். 

மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுப்பதாக அமையும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். 

போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மிகவும் கண்டிக்கத்தக்கது" என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
*

Share this story